×

தண்டையார்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து மக்கள் மறியல்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர், இளைய முதலி தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பைப்லைன் உடைப்பு காரணமாக கடந்த  சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக இந்த பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர். ஆனால், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்த முடியாததால் இப்பகுதி மக்கள் தினசரி குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இந்த பகுதி  மக்கள் நேற்று காலை இளைய முதலி தெருவில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “இந்த பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், அதை  பயன்படுத்த முடிவதில்லை. இதனால், குடிநீர் பிடிக்க காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. மேலும், இங்கு கால்வாய் அடைப்பால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி மலேரியா, டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கழிவுநீரை மிதித்து செல்வதால், தொற்று நோய் பாதிப்பு  உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, அதிகாரிகள் உடனடியாக இவற்றை சரி செய்யவில்லை என்றால் அடுத்தகட்டமாக அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம்  நடத்துவோம்” என்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என ேபாலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Tags : Tondiarpet, Wastewater, drinking water,people
× RELATED இளைஞர் சந்தேக மரணம்: உறவினர்கள் போராட்டம்