×

கடல்சார் நடவடிக்கை நாட்டு வளர்ச்சிக்கு துணையாக உள்ளது : அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு

சென்னை: கடல்சார் நடவடிக்கைகளே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய கடலோர காவல் படையில் சிறந்த சேவையாற்றிய அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, பரங்கிமலையில் உள்ள கடலோர காவல்படை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது, கடலோர காவல்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றார். நிகழ்ச்சியில், கடலோரக் காவல்படையின் பொது இயக்குனர் நடராஜன், மூத்த அதிகாரிகள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கடலோர காவல்படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 61 பேருக்கு ராஜ்நாத் சிங் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்திய கடலோர காவல்படையில் சிறந்த சேவைக்கான விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தடையற்ற கடல்சார் நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. கடலோர பாதுகாப்பு அதனை உறுதி செய்துள்ளது.  இந்திய கடல் எல்லையில் அமைதிக்காக சர்வதேச கடல்சார் நிறுவனங்களும் சீராக செயல்பட்டு வருகின்றன. கடல்சார் துறைக்கு, கடலோர காவல் படை பக்கபலமாக விளங்குகிறது. கடல் பகுதியில் உயிர்களை பாதுகாப்பதோடு, கடலோர மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்புடன் மீட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  

நடுக்கடலில் கப்பல்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இந்திய கடலோரக் காவல்படை வலிமையாக அமைந்துள்ளது. மேலும், கடலோரக் காவல் படையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Rajnath Singh ,country , Maritime action, contributing, country's growth,Minister Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...