×

தண்ணீரில் தாமரையை மூழ்கடித்த மகிழ்ச்சியில் ‘டீ’ பார்ட்டி வைத்த இலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தொழில் முனைவோரை தெறிக்கவிட்ட மாவட்ட அதிகாரி பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட குறுந்தொழில் முனைவோருக்கு உதவதான் மாவட்ட தொழில் மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் ஸ்பெஷலே, தொழில் முனைவோரிடம் 10 முதல் 50% கமிஷன் வாங்குவது தான். ஆனால், அதிகாரிகளின் கணக்கு தப்பாக போய்… ஒரு தொழில் முனைவோர்தலை தெறிக்க ஓடிய கதையை தன் நண்பரிடம் பகிர்ந்து கொண்டார். அவர்கள் பேசியதை அப்படியேசொல்றேன் கேளு… ‘‘பாக்குமட்டை தயாரிக்க நினைச்சு, கோவை மாவட்ட மையத்துக்கு போனேன். ஒரு விண்ணப்பம் கொடுத்தேன். அதுக்கு 22 ஆயிரம் மானியம்னு சொன்னதும் சந்தோஷப்பட்டேன். ஆனா, அதுக்கு அங்கிருந்த அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் கமிஷன் கேட்டாங்க.. போங்கடா… நீங்களும் உங்க மானியமும்… வெளியில் கடன் வாங்கி தொழில் செய்துக்கிறேன்னு சொல்லிட்டு தப்பித்தால் போதும்னு வெளியே ஓடிவந்துட்டேன்..’’ என்று தன் நண்பரிடம் மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் என்றார் விக்கியானந்தா.‘‘தண்ணீரில் மிதக்கும் தாமரையை பார்த்து இருக்கிறோம்… மூழ்கிப்போன தாமரையை ‘டீ’ பார்ட்டி வைத்து  கொண்டாடிய இலை கட்சியை சேர்ந்த  நிர்வாகி யாரு….’’ என்றார் பீட்டர் மாமா. ‘ராமநாதபுரம் தொகுதியை இலைக்கு தான் ஒதுக்க வேண்டுமென அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினாங்க. சிட்டிங் எம்எல்ஏவும் தனது அமைச்சர் பதவியை பறித்தாலும், சீட் தருவார்கள் என நம்பிக்கையோடு இருந்தாராம். மாஜி எம்பியும் தனக்கு வாய்ப்பு கிடைக்குமென மலைப்போல நம்பி இருந்தாராம். திடீர் திருப்பமாக ராமநாதபுரம் தொகுதி தாமரைக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக ‘‘ஐந்தெழுத்துக்காரர்’’ அறிவிக்கப்பட்டார். இவர் பெயரை கேட்டதுமே இலை கட்சியினர், ‘‘அப்ப நம்ம வேலை மிச்சம்னு சொல்லிட்டு… பெயரளவில் மட்டும் பிரசாரப் பணியில் ஈடுபட்டாங்களாம். வேட்பாளர் அறிவிப்பு நாளில் இலையின் ‘மூத்த நிர்வாகி’யானவர், ‘என்னத்த பிரசாரம் செஞ்சு என்னத்த சாதிக்கப் போறோம். முடிஞ்சவரை பார்ப்போம்’ என ஆறுதல் சொன்னாராம். பிரசாரம் தான் சூடு பிடிக்கல….‘வாங்க எல்லோரும் சூடாக ‘கப்’ டீ சாப்பிடுவோம்’’ எனக்கூறி அனைவருக்கும் டீ ஆர்டர் கொடுத்தாராம். இந்த செய்தி தான், மாவட்ட தாமரை பிரமுகர்கள் மத்தியில் பேசிக்கிறாங்க… இலை கட்சியினர் தண்ணியில நம்மள மிதக்க வைப்பாங்கனு நினைச்சா… தண்ணீக்குள்ள அழுத்திட்டாங்களேன்னு புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தல் நேரத்தில் கல்லா கட்டிய காக்கி அதிகாரியின் லீலைகளை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தொண்டைமான் மாவட்டத்தில் ஒரு மாதமாக மாவட்ட காக்கிகளுக்கு தெரியாமல் மணல் கடத்தல் படுஜோராக நடந்ததாம்.. பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாக்குப்பதிவுக்கு முந்தையநாளும், வாக்குப்பதிவு அன்றும் 100 லாரிகளில் மணல் கடத்தப்பட்டுள்ளதாம்.. மாவட்ட இலைகட்சியை சேர்ந்த பிரமுகர்கள் 5 பேர் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி கடத்தல் வேலையை கச்சிதமாக முடித்துள்ளார்களாம்.. இந்த தகவல் மாவட்ட காக்கிகளுக்கு கசிய தொடங்கியதால் சம்பந்தப்பட்ட சப்டிவிசன் காக்கிகள் முதல் அதிகாரி வரை லட்சக்கணக்கில் கொடுக்கப்பட்டதால் அவர்கள் கண்டு காணாமல் இருந்ததாக மாவட்ட காக்கிகள் வட்டாரத்தில் தற்போது கசிய தொடங்கியுள்ளதாம்…மணல் கடத்தல் பற்றி அந்த பகுதியை சேர்ந்த சிலர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தால் சப் டிவிசன் காக்கி அதிகாரி இலைகட்சியை சேர்ந்த பிரமுகர்களிடம் போட்டுகொடுத்து விட்டாராம்… காக்கிகளுக்கு தகவல் சொல்பவர்களை நேரில் வரவழைத்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து இலைகட்சி பிரமுகர்கள் ஆப் செய்து விட்டாங்களாம்… மணல் விஷயத்துல ஹெல்ப் பண்ணதால சப்டிவிஷன் காக்கி செம குஷியில இருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா‘‘தேர்தல் சூட்டை விட சரக்கு 24 மணிநேரமும் சுடச்சுட விற்கப்பட்டதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டம் காட்பாடியில, டாஸ்மாக் சரக்கு 24 மணிநேரமும் தடையில்லாம விக்குறாங்களாம். இந்த சரக்கு விற்பனை செய்ற மேட்டர் தொடர்பாக, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் போயிருக்கு, புகார் போன உடனே காக்கிங்க ஜீப்புல வேகமா சரக்கு விற்பனை செய்ற இடத்துக்கு போனாங்களாம். போன இடத்துல, அவங்களுக்கு நல்ல உபசரிப்போட, சம்திங்க கொடுத்து, சந்தோஷப்படுத்தி, வழியனுப்பி வைச்சாங்களாம். இதனால, காக்கிங்க ஆசியோட அந்த ஏரியில சரக்கு விற்பனை ஓஹோன்னு போகுதாம். உயிர்பலி வாங்கிய சரக்கு விற்பனையை தடுக்க, மாவட்ட உயர் காக்கி நடவடிக்கை எடுப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கணும்னு ஜனங்க வேதனையில புலம்புறாங்க.. ஆனா குடிமகன்கள் 24 மணி நேரமும் சுடச்சுட சரக்கு கிடைக்குது என்று சந்தோஷப்படுறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post தண்ணீரில் தாமரையை மூழ்கடித்த மகிழ்ச்சியில் ‘டீ’ பார்ட்டி வைத்த இலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Dee ,wiki ,Yananda ,Peter ,Govai District Ministerships ,
× RELATED களிமண்ணாலும், அட்டையாலும் ராயல் என்...