×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

மதுரை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ள ஐகோர்ட் கிளை, சிபிசிஐடியிடம் சரணடைய உத்தரவிட்டுள்ளது. சென்னை, தண்ைடயார்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக செப். 17ல் தகவல் வெளியானது. இது முற்றிலும் தவறானது. வெளியிடப்பட்ட படங்கள் வெவ்வேறானது. வேண்டுமென்றே என் மீது பழிபோடும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தேனி கண்டமனூர் விலக்கு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ‘‘மனுதாரரை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரம் நடந்துள்ளது. இதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த தகவலை பரப்பிய பெரும்பாலான சமூகவலைத்தள முகவரிகள் போலியானது. மனுதாரர் மனரீதியாக பாதித்துள்ளார். எனவேதான் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவரது எதிர்காலம் பாதிக்கும்’’ என்றார். அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘மும்பையில் தேர்வு எழுதியதும், கவுன்சலிங்கில் பங்கேற்றதும் வேறு நபர். கல்லூரியில் சேர்ந்தது மட்டும் தான் இவர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டிற்கு போதுமான முகாந்திரம் உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்.

எனவே, மனுதாரரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வழக்கின் விசாரணை பாதிக்கும். எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ எனக் கூறி, ஆள்மாறாட்டம் தொடர்பான இருவேறு புகைப்படங்களை நீதிபதி முன் காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘சிபிசிஐடி போலீசார் எப்போது விசாரணையை துவக்குவர்? மனுதாரர் மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. பிரச்னை வெளியில் வந்தபிறகு தான் கல்லூரியில் இருந்து நின்றுள்ளார். விசாரணை நடந்தால் தான் முழு விபரம் தெரியும்.

எனவே, முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுதாரர் உடனடியாக சிபிசிஐடி போலீசாரிடம் சரணடைந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன்பிறகு ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமெனவும், அரசுத் தரப்பில், சிபிசிஐடி போலீசார் ஓரிரு நாட்களில் விசாரணையை துவங்குவர் எனவும்  கூறப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனு மீதான விசாரணையை அக். 1க்கு தள்ளி வைத்தார்.


Tags : Impersonation , Neet exam, impersonation, Udithsurya, Munjamin
× RELATED நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில்...