×

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று கல்லிடை கோயிலுக்கு வந்தது: பக்தர்கள் உற்சாக வரவேற்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு

அம்பை: ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை இன்று கல்லிடைக்குறிச்சிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நவீன பாதுகாப்புடன் கோயிலில் வைக்கப்பட்டது. இதையொட்டி சிலையை பக்தர்கள் பயபக்தியுடன் வரவேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 700 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையாள் சமதே அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 1982ம் ஆண்டு ஐம்பொன்னாலான நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் காணாமல் போனது. இந்த சிலைகளில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு தொல்லியல் துறை உதவியுடன் கடந்த செப்டம்பர் 11ம்தேதி சிலை கடத்தல் தடுப்பு குழுவினர் அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து பெற்று வந்தனர்.தமிழகம் கொண்டு வரப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை  கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கல்லிடைக்குறிச்சி கோயிலுக்கு சிலையை எடுத்துச் செல்ல கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், குருக்கள் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனு செய்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் நேற்று நடராஜர் சிலை கும்பகோணத்தில் இருந்து தென்காசிக்கு கூடுதல் பாதுகாப்போடு எடுத்து வரப்பட்டது. இன்று காலை சுமார் 7 மணியளவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்போடு தென்காசியில் இருந்து நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கொண்டு வந்தனர்.

அதன்பிறகு அங்குள்ள கன்னடியன் கால்வாய் அருகே ஐயப்பன் கோயில் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள் திரண்டு சிலையை பயபக்தியுடன் வரவேற்றனர். உத்திராட்ச கொட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட பன்னிரு திருமுறைகள் பெட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் திருமுறைகள் படித்து பஞ்சவாத்தியங்கள் முழங்க சிலைக்கு வரவேற்பு அளித்தனர்.அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் சங்கர், கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடராஜர் சிலைக்கு தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சிலையை வைத்து அம்பை பிரதான சிலையில் பட்டாசுகள் வெடிக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். அம்பை 6ம் தெரு, கோட்டை தெரு வழியாக சுமார் ஒன்றறை கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் சென்றது. அதன்பிறகு தீபாராதனை காட்டப்பட்டு கோயிலுக்குள் நடராஜர் சிலை எடுத்துச் செல்லப்பட்டது. இதில் கல்லிடைக்குறிச்சி சித்த பீடம் கோமதிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி அம்பை டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நவீன அறையில் பாதுகாப்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து 37 ஆண்டுகளுக்கு பிறகு சிலை கொண்டு வரப்பட்டதையொட்டி கோயிலில் தற்போது கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நடராஜர் சிலை, 32 எம்எம் இரும்பு கம்பியினால் ஆன பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் உட்பிரகார நுழைவு கதவு, வெளிப்புற கதவுகள், நடராஜர் சன்னதி எதிரே உள்ள கதவு என அனைத்து பகுதியிலும் தனித்தனியாக இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பகுதியில் யாரும் அத்துமீறி நுழைந்தால் அதனை வெளிப்படுத்த நவீன அவசர அலாரமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

வீதிகள் தோறும் வழிபாடு
அம்பைக்கு நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டதும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு தெரு சந்திப்பிலும் பக்தர்கள் கூடி நின்று சிலையை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபட்டனர். ஊர்வலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் நெல்லை - அம்பை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரூ.30 கோடி மதிப்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு கல்லிடைக்குறிச்சி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை 30 கிலோ 300 கிராம் எடையும், 75 சென்டி மீட்டர் உயரமும், 47 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.30 கோடி. 37 ஆண்டுகள் கழித்து கோயிலுக்கு சிலை வந்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு சிலையை வரவேற்றனர்.

Tags : Australia ,Kalladi ,devotees , Australia, Statue of Natarajar, Gallida
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது