×

737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: போயிங் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: 737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துள்ளாகின. இந்தோனேசியயில் நடந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 189 பேரும், இதேபோல் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துக்கும் சாப்ட்வேர் பிரச்னைதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. தவறான சென்சார் தகவல்கள் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 100 வழக்குகள் தொடுக்கப்பட்டன. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கென சுமார் 350 கோடி ரூபாயை போயிங் நிறுவனம் கடந்த ஜூலையில் ஒதுக்கியது. அந்த தொகையில் இருந்து 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடியே 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதிக்குள் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி வழங்கல் பணியை பார்வையிட நியமிக்கப்பட்ட அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் இழப்பீட்டு தொகையை பெற எந்த நிபந்தனையும் இல்லை என்றும், அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags : Boeing ,families ,Max Boeing ,plane crash victims ,Max , 737 Max plane crash, 346 people family, 1 crore, compensation, Boeing
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!