×

தர்மபுரியில் கனமழையால் கட்டிய 8 மாதத்தில் தடுப்பணை உடைந்தது

தர்மபுரி: தர்மபுரியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வத்தல்மலை தடுப்பணை உடைந்தது. இதனால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மலைகிராம மக்கள் பெரிதும் அவதிக்கு  ஆளாகினர். தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தர்மபுரி நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து, நள்ளிரவில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், தர்மபுரி மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, கொட்டித் தீர்த்த மழை காரணமாக வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. நேற்று காலை இந்த தடுப்பணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், சாலையில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த கிராம மக்கள், கற்களை வைத்து தடுப்பணையை அடைக்க முயன்றனர். ஆனால், முடியாததால் தண்ணீர் முழுவதும் வீணாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், தடுப்பணையை  அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்வதால் வத்தல்மலை பகுதிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மலை கிராம மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ₹6 லட்சம் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் 8 மாதத்திலேயே காட்டாற்று வெள்ளத்தில் தடுப்பணை  உடைந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Tags : rains ,Dharmapuri , Heavy rains, Dharmapuri,broken,8 months
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி