×

கடுமையான விலை உயர்வு எதிரொலி,..சமையலில் வெங்காயம் புறக்கணிப்பு: ஓட்டல்களில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி கட்

சென்னை: வெங்காய விலை எதிரொலியாக சமையலில் பொதுமக்கள் வெங்காயத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். ஓட்டல்களில் பிரியாணிக்கு வெங்காய பச்சடியை நிறுத்தி விட்டனர். மேலும் ஆம்லெட்டில் முட்டை கோஸ் அதிக அளவில் சேர்க்கப்படுவதாக ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்திற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது. இதில் 80 சதவீதம் வெங்காயம் மகாராஷ்டிராவில் இருந்துதான் வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, மற்ற மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது என்பது மிகவும் குறைந்துள்ளது. வெங்காயம் வரத்து குறைவால் அதன் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் 30க்கு விற்கப்பட்டது, தற்போது ₹20 அதிகரித்து ஒரு கிலோ 50க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் கிலோ 70க்கு விற்கப்படுகிறது. தற்போது வரும் வரத்து இன்னும் குறைந்தால் மொத்த மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ 70 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுவே சில்லரை விலையில் 100 வரை விற்க வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களைதான் வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது. வெங்காயம் என்பது சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாம்பார், காரக்குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்று எந்த குழம்பு வைத்தாலும் அதில் சேர்ப்பதற்கும், அதனை தாளிப்பதற்கும் வெங்காயம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல பிரியாணி, ஆம்லெட் உள்ளிட்டவற்றிற்கு பிரதான பொருளாக வெங்காயம் இருந்து வருகிறது.தற்போது வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் வெங்காயம் பயன்படுத்துவதை குறைக்க தொடங்கியுள்ளனர்.
வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். தற்போது விலையை கேட்டாலே கண்ணீர் வர தொடங்கி விட்டது. பழைய நிலையில் வெங்காயத்தை சேர்த்தால் வெங்காயத்துக்காக பட்ஜெட்டில் கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. பால் விலை அண்மையில் உயர்த்தப்பட்டது. இதை எப்படி சமாளிப்பது என்று நினைத்திருந்த வேளையில், வெங்காயம் விலை உயர்வு எங்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோல ஓட்டல்களில் பிரியாணி சாப்பிட்டால் அதற்கு வெங்காயம் பச்சடி வைப்பது வழக்கம். அது எத்தனை முறை கேட்டாலும் வழங்கப்படும். அது தற்போது ஒரு டைம் மட்டுமே வைக்கப்படுகிறது. அதுவும் வழக்கத்தை விட குறைவாக வைக்கப்படுகிறது.மீண்டும் கேட்டால் வெங்காயம் விலை உயர்வை காரணம் காட்டி வைக்க மறுப்பதாக ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் கூறிவருகின்றனர்.  மேலும் ஆம்லெட்டிலும் வெங்காயத்தின் அளவை குறைத்து விட்டனர். அதற்கு மாறாக ஆம்லெட்டில் முட்டை கோஸ் அதிக அளவில் சேர்க்க தொடங்கியுள்ளனர். இன்னும் வெங்காயம் விலை அதிகரித்தால் ஆம்லெட், பிரியாணி விலையையும் உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : price hikes ,hotels ,Echo , Price hike, onion, hotel, biryani, onion
× RELATED கோடை விடுமுறை எதிரொலி; பயணிகளின்...