×

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் உபரி நீர் கால்வாய்களை பராமரிப்பது யார்?:

* பொதுப்பணி-உள்ளாட்சி துறைகள் இடையே குடுமிப்பிடி சண்டை
* வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏரிகளில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய்களை பராமரிப்பது யார் என்பதில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் இடையே குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அபாயம் நிலவுகிறது. சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள், ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுகின்றன. பொதுப்பணித் துறையின், பாலாறு வடிநில கோட்டத்தின் கீழ், செம்பாக்கம், மாடம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், சேலையூர், சிட்லபாக்கம், நெமிலிச்சேரி, பல்லாவரம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய ஏரிகள், இவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏரிகளின் உபரிநீர் கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் நீரானது கால்வாய் வழியாக மற்ற அருகில் உள்ள ஏரிகளுக்கும், ஆறுகளுக்கும் செல்லும் வகையில் உள்ளன.

மழைக்காலத்தில், இந்த ஏரிகளில் ஒன்று நிரம்பினால், அடுத்த ஏரிக்கு அதன் உபரிநீர் செல்லும் வகையில், இணைப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள், முழுமையாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமானவை. இதன் பராமரிப்பும், அத்துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தற்போது இக்கால்வாய்களை அருகில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் முற்றிலும் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், ஏரிகளின் உபரிநீர் விவசாய நிலங்கள் வழியாக சென்று அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. நகரங்களில், இந்த பொதுப்பணித் துறை கால்வாய்களை பராமரிப்பதில்லை. மாறாக, ‘’கழிவுநீர் பிரச்னையை கையாள வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல், பொதுப்பணித் துறை கால்வாயில் கழிவுநீரை விடுவதால், அவர்கள் தான் கால்வாய் பராமரிப்பு பணியையும் செய்ய வேண்டும்’’ என பொதுப்பணித் துறை ஒதுங்கி கொண்டது.

உள்ளாட்சி நிர்வாகங்களோ, ‘’பொதுப்பணித்துறை கால்வாயை, நாங்கள் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்’’ என, அவர்களும் எந்த பராமரிப்பு பணிகளையும் செய்வதில்லை. இந்த இரண்டு துறைகளின் குடுமிப்பிடி சண்டையால், வரும் வடகிழக்கு பருவ மழைக்கு, உபரிநீர் கால்வாய்களில் நிரம்பியுள்ள குப்பை, கழிவுகளால், உபரி நீர் ஏரிகளுக்கு செல்லாமல், நகரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான உபரிநீர் கால்வாய்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. அனைத்து கால்வாய்களிலும் கழிவுநீர் தான் ஓடுகிறது. இந்த இரண்டு மைய பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தான். கால்வாய்களை சீரமைக்காத பட்சத்தில், வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் உள்ளாட்சிகள் தான். பொதுப்பணித்துறை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், எங்கள் உபரி நீர் கால்வாயில் வரும் கழிவுநீரை மொத்தமாக அடைக்க வேண்டி வரும். அதனால், வரும் பிரச்னையை கையாள வேண்டியதும் உள்ளாட்சிகள் தான்’’ என்றார்.

இவ்வாறு, இரண்டு துறை அதிகாரிகளும், ஒருவர் மாற்றி ஒருவர் என குறை கூறி வருகின்றனர். ‘‘இப்பிரச்னைக்கு தீர்வாக, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தலைவராக இருக்கும் கலெக்டர்கள், பொதுப்பணி, வருவாய், நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். உபரி நீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், முறைகேடான கழிவுநீர் இணைப்புகளையும் கண்டறிந்து, சிறப்புக்குழு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வரும்காலத்தில் வெள்ளம் சூழாமல் மக்களை காப்பாற்ற முடியும்’’ என பொது மக்கள் தெரிவித்தனர்.

உபரிநீர் கால்வாய்களை கண்டுகொள்ளாதது ஏன்?
சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடந்துவருகிறது. இதில், ஏரிகளை தூர்வாரி, அந்த மண்ணை கரையில் கொட்டி பலப்படுத்தும் பணிகள் மட்டுமே நடந்துவருகிறது.
ஏரியின் கலங்கல்கள், மதகுகளை சீரமைப்பதில்லை. அதோடு, உபரிநீர் செல்லும் கால்வாய்களும் உள்ளதா என பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், ஏரிகளில் நீர் நிரம்பினால், கலங்கல்கள், மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறும்போது, கால்வாய்கள் ஆக்கிரமிப்பினால் அருகில் உள்ள கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளை மட்டும் தூர்வாரினால் மட்டும் போதாது. உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, முறையாக மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

Tags : districts ,Kanchi ,Chengalpattu ,Tiruvallur ,Chengalpattu Districts , Who Maintains, Surplus Canals, Thiruvallur, Kanchi ,Chengalpattu Districts:
× RELATED காஞ்சியில் லேசான மழை