கயத்தாறு அருகே பல வருடங்களாக தூர்வாராததால் சிதிலமடைந்து கிடக்கும் தலையால்நடந்தான்குளம்

கயத்தாறு: கயத்தாறு அருகேயுள்ள தலையால்நடந்தான்குளம் பராமரித்து தூர்வாரப்படாததால் மடைகள் பழுதடைந்துள்ளது. கரைகள் உயர்த்தபடாததால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம் தலையால்நடந்தான்குளம். இங்கு சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இவ்வூரின் வடக்கே உள்ள குளமானது 60 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதன் மூலம் சுமார் 1500 பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெற்று நெல், பருத்தி, கம்பு, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு வந்தது. மழை காலங்களில் கயத்தாறுக்கு தெற்கே உள்ள தவிடுதாங்கி குளம் நிரம்பி உபரிநீர் வரத்துகால் மூலம் இந்த குளத்திற்கு வந்து சேரும். அதன்பிறகு இக்குளம் நிரம்பி வெளியேறும் தண்ணீர் உப்பாறு மூலமாக வடகரை, கீழக்கோட்டை, கைலாசபுரம் ஆகிய ஊர்களில் உள்ள குளங்களுக்கு செல்லும்.

தலையால்நடந்தான் குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குளத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் மண் மேடுகள் உருவாகி ஆழம் குறைவாக உள்ளது. மேலும் கரைகள் உயர்த்தப்படாததால் மழைகாலங்களில் விரைவில் நிரம்பி விடுகிறது. குளத்தில் அமைந்துள்ள இரண்டு மடைகளும் உடைந்து போய் பலகீனமாக உள்ளதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வெளியேறிவிடுகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கரைகளில் மண் அள்ளி போடப்பட்டாலும் எந்த பயனுமில்லை. மழைக்காலம் ஆரம்பமாக உள்ள நிலையில் குளம் தூர்வாரப்படாததால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த குளத்தை தூர்வாரக் கோரி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில் தமிழகம் முழுவதும் எண்ணற்ற குளங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தலையால்நடந்தான்குளத்தையும் தூர்வாரி இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் அரசு ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Kayattaru ,pool , Kayattaru, pool
× RELATED பயிற்சி மருத்துவர்கள் பிரசவம்...