பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சந்தித்து பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜ தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதாக குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் பாஜ.வுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. எனினும், பிரதமரின் 69வது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய மம்தா, நேற்று அவரை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மோடிக்கு மம்தா வழக்கமாக வழங்கும் குர்தாவையும், இனிப்பையும் வழங்கினார். இவரும் சந்தித்த புகைப்படங்கள், பிரதமர் அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும்படியும், தனது மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் மோடியிடம் மம்தா பேசினார். கடைசியாக, 3 ஆண்டுகளுக்கு முன் மோடியை மம்தா சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, இருவருக்கும் இடையே கடுமையான அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஏற்பட்டன. இந்நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மோடி மனைவியுடன் சந்திப்பு

டெல்லி செல்லும் வழியில் கொல்கத்தா விமான நிலையத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் மனைவியான யசோதா பென்னை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். யசோதா பென்னுக்கு, மம்தா பானர்ஜி புடவை ஒன்றை பரிசளித்தார்.

Related Stories:

>