×

நாகர்கோவில் அருகே கடலுக்குள் விடப்பட்ட டால்பின் மீன் இறந்தது: கரை ஒதுங்கிய உடல் மீட்பு

சுசீந்திரம்: நாகர்கோவில் அருகே கரை ஒதுங்கிய டால்பின் மீன் இறந்தது. கரை ஒதுங்கிய மீன் உடலை வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். மீன்களில், டால்பின் மீன்கள் அரிய வகை மீன்கள் ஆகும். இந்த வகையிலான மீன்கள் கூட்டம், கூட்டமாக கடலில் இருக்கும். தனியாக இந்த ரக மீன்கள் வருவது கிடையாது. இந்த நிலையில் கடந்த 15ம்தேதி, நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் கடற்கரையில் டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. உடனடியாக நாட்டுப்படகை கொண்டு வந்து அந்த மீனை அதில் தூக்கி போட்டு, மீண்டும் மீனவர்கள் கடலுக்குள் கொண்டு சென்றனர். இந்த மீன் சுமார் 8 அடி நீளமும், 140 கிலோ எடையும் இருந்தது. டால்மின் கரை ஒதுங்கிய தகவல் அறிந்ததும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டனர். பொதுவாக டால்பின் மீன்கள் கூட்டமாகவே இருக்கும். தனியாக வர வாய்ப்பு இல்லை. இந்த மீன் மட்டும் எப்படி வந்தது என்பது தெரிய வில்லை என கூறிய மீனவர்கள், மேற்கு கடலோர பகுதிகளில் இந்த கால கட்டத்தில் அதிகளவில் டால்பின் மீன்களின் வருகை இருக்கும் என்றனர்.

சமீப காலங்களில் இப்போது தான் குமரி கடற்கரை பகுதியில் டால்பின் மீன்களை பார்த்தோம் என்றும் மீனவர்கள் கூறினர். இந்த நிலையில் மீனவர்களால் கடலுக்குள் கொண்டு விடப்பட்ட டால்பின் மீன், இன்று காலை பள்ளம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்தனர். டால்பின் எப்படி இறந்தது என்பது தெரிய வில்லை என வனத்துறையினர் கூறினர். கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் தான் டால்பின் இறந்தது எப்படி? என்பது தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Nagercoil , Dolphin fish, body restoration in Nagercoil
× RELATED பிரேசிலில் கொரோனாவுக்கு மின்னல்...