திருப்பாலைக்குடியில் காவு வாங்க காத்திருக்கும் மருத்துவமனை கட்டிடம்

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடியில் உள்ள பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து பொதுமக்களை காவு வாங்கும் விதமாக உள்ளது. இதனை உடனே அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள திருப்பாலைக்குடியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மருத்துவமனையாக இயங்கி வந்த பழைய கட்டிடம் சேதமடைந்தது. இந்நிலையில் மருத்துவமனைக்காக புதிய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு, தற்போது புதிய கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. ஆனால் ஏற்கனவே மருத்துவமனையாக இயங்கி வந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

அந்த கட்டிடம் இருக்க கூடிய பகுதி குழந்தைகளும், பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய முக்கிய வீதியாகும். அதன் அருகில் அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடம், வங்கி ஆகியவை உள்ளது. தற்போது இந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கீழே விழுந்து வருகின்றது. கட்டிடத்தின் மேற்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் முளைத்து பெரிதாகி வருகின்றது. இதனால் மேலும் கட்டிடம் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அடுத்து மழை காலம் என்பதால் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக விழுந்தால், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுக்கும் விதமாக அந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்த காதர் கூறுகையில், ‘‘இந்த பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஓடி ஆடி விளையாடுகின்றனர். அருகிலேயே அங்கன்வாடி உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் என தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழியில் இப்படி ஒரு கட்டிடம் இருப்பது மிகவும் அச்சமாகவே இருக்கின்றது. எனவே ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்னர் வரும் முன் காக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Hospital building , Hospital Building
× RELATED மருத்துவமனையில் கட்டிடம் திறப்பு