×

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வேகமெடுக்கிறது டிஜிட்டல் பண பரிவர்த்தனை : ஒரே நாளில் 10 லட்சம் பேர் பதிவு

வாலாஜா : நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவதால் ஏடிஎம் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர் வங்கியாளர்கள். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நமது அண்டை நாடான சீனாவில் 80 சதவீத மக்கள் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தணை செய்கிறார்கள். அதற்காக அங்கே இரண்டு ஆப்ஸ்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இதற்காக 80 ஆப்ஸ்கள் உள்ளது. ஆனால், நமது நாட்டில் 20 சதவீதம் மக்கள் மட்டும் டிஜிட்டல் முறையை பயன்படுத்துகிறார்கள். இதனை மாற்றுவதற்காக மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி டிஜிட்டல் அபியான்(திஷா) திட்டத்தின் கீழ் மிகபெரிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை 10 லட்சம் மாணவர்களையும் மற்றும் பொதுமக்களையும் இதில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசின் பொது சேவை மையத்தின் மூலமாக டிஜிட்டல் முறையில் வங்கி பரிவர்த்தனை ஆர்டிஜிஎஸ் நெப்ட் மற்றும் ரொக்கமில்லா பணத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து தொடர் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 20 மணி நேரம் இந்த வகுப்புகள் நடத்தி ஆன்லைன் மூலமாக தேர்வுகள் வைக்கப்படுகிறது, தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

இதேபோல் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வீட்டு பத்திரம் உட்பட 16 வகையான ஆவணங்களை அவர்கள் மொபைல் போனில் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டால் அதனை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் லாக்கர் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக நாட்டின் மிகப்பெரிய அளவில் கள்ளப்பணம் லஞ்சப்பணம் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து புழக்கத்தில் விடப்படும், நமது நாட்டுக்கு இணையான  ரூபாய்களை புழக்கத்தில் விடுவதை கட்டுப்படுத்த முடியும். இதனால் வளர்ந்த நாடுகளை போல் மிகப்பெரிய அளவில் பொருளாதார நாடாக நமது நாடும் வளருமென பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உலகளவில் பின்லாந்து காகித நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டது. அதேபோல் சிங்கப்பூர், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மிக குறைந்த அளவிலேயே காகிதப்பணத்தை பயன்படுத்துகின்றன. பிளாட்பார கடை முதல் மிகப்பெரிய மால்களில் மொபைல் ஆப்ஸ் மூலமாக பணத்தை செலுத்துவதற்கு வழிவகை செய்துள்ளது. இதேபோல் இந்தியாவிலும் இதனை 100 சதவீதம் நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Tags : India , Digital Money Transaction,accelerating across the country,Digital India Scheme
× RELATED சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம்...