×

லாரி கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி நஷ்டஈடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

திருவெற்றியூர்: மணலியில் சாலை விபத்தில் பலியான மாணவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணலி அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் ஷியாம் (13), பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, பெரியார் நகர் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் குடிநீர் லாரியை நிறுத்தி லிப்ட் ேகட்டு அதில் ஷியாம் அமர்ந்து சென்றுள்ளான். சிறிது தூரம் சென்றதும் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில், ஷியாம் கீழே விழுந்து, லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தான். டிரைவர் குபேந்திரன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாணவனின் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரியார் நகரில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெரியார் நகர் பகுதிக்கு செல்ல பஸ் வசதியில்லை. இதனால் தான் மாணவன் அவ்வழியே சென்ற லாரியில் லிப்ட் கேட்டு பயணித்து, விபத்தில் சிக்கி உயிரிழந்தான். எனவே, உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், குடிநீர் லாரி மற்றும் கனரக வாகனங்கள் இப்பகுதி வழியாக செல்ல தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவாதம் அளித்தால்தான் கலைந்து செல்வோம், என கூறினர். இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags : Lorry ,school road relatives , Lorry topples school road relatives, demanding compensation
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது