×

பாரம்பரிய உணவு பழக்கத்தோடு உடற்பயிற்சியும் செய்து தமிழக மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்: உணவு திருவிழா நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை: அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவு பழக்கத்தோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டு தமிழக மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று `மதராசபட்டினம் விருந்து’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கூறினார்.
சென்னை, தீவுத்திடலில் மக்கள் நல்வாழ்வு துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மதராசபட்டினம் விருந்து - வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம்’ என்ற நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இளம் வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் பெருகி வருவதற்கு முதல் காரணம், நமது உணவு பழக்க வழக்கமே. நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளான சாமை, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற இதர நவதானியங்களை அன்றாட உணவில் பயன்படுத்தியதனாலும், அதற்கேற்ப உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்ந்ததினால்தான், அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை அரிதாக காணப்பட்டது.

அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவு பழக்கத்தோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவு வணிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஒருங்கிணைத்து அவர்களது உணவின் சிறப்பை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தின் முக்கிய அம்சமாக அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு சுவைகளை நமக்கு படைக்க 160 உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்களின் உணவு அரங்கங்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த சிறப்பு உணவு அரங்கங்கள் இடம்பெறுகின்றன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வினாடி வினா, கலந்தாய்வு மற்றும் செய்முறை விளக்கங்கள், முக்கிய பிரமுகர்களின் உரைகள், பட்டிமன்றம் மற்றும் சமையல் வல்லுநர்களின் ஆரோக்கியமான சமையல் செய்முறைகள் குறித்த விளக்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நமது உடல் நலத்திற்காக பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை முறைகள், உண்ண வேண்டிய சத்தான உணவு வகைகள், உடல் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு, ஆலோசனைகளை பெற்று, ஆரோக்கியமான தமிழகத்தை, சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். மதராசபட்டினம் விருந்து நேற்று காலை தொடங்கி வரும் ஞாயிறு மாலை வரை தீவுத்திடலில் நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் சென்று விரும்பிய உணவுகளை வாங்கி சாப்பிடலாம். அனுமதி இலவசம்.
விழா முடிந்ததும், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

துரித உணவுகளால் நோய்கள் வருகிறது விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
உணவை மருந்துபோன்று குறைவாக, அளவாக உண்ண வேண்டும். அதிகம் உண்டால், எதிர்காலத்தில் மருந்தே உணவாகிவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளைய சமுதாயத்தினர்தான், நமது நாட்டின் எதிர்கால தூண்கள். தற்போது ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் பர்கர், பீசா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது. எவ்வித புரத சத்துக்களோ, வைட்டமின்களோ, கனிமச் சத்துக்களோ இல்லாத, உணவுகளாக துரித உணவுகள் உள்ளன. அவற்றில் உப்பும், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் உள்ளதால், அவற்றை உண்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு, தலைவலி, உடல்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உட்பட பல்வேறு நோய்கள் வருகின்றன. எனவே, துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.

வணிக நோக்கத்தினை மட்டுமே மையமாக கொண்டு, மேலை நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள், செயற்கை குளிர்பானங்கள், அதிக எண்ணெய் உள்ள உணவு பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தினால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும். அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களும், தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Tamil Nadu ,Food festival chief minister ,Edappadi , Traditional food, gym, food festival, CM Edapadi
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...