×

முத்துப்பேட்டையில் ஆறுகளில் தண்ணீர் இருந்தும் நீர்நிலைகள் நிரம்பவில்லை

*விவசாயிகள், பொதுமக்கள் வேதனை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையி்ல் ஆறுகளில் கடல்போல் தண்ணீர் இருந்தும் அருகில் உள்ள ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பவில்லை என்று பொதுமக்கள், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய விவசாய நிலங்களுக்கு கோரையாறு, மரைக்கா கோரையாறு, கிளந்தாங்கி ஆறு, வளவனாறு மற்றும் பாமணியாற்றின் மூலமாக நீர்ஆதாரம் கிடைக்கிறது. இதன்மூலம் சுமார் 13ஆயிரத்து 323 எக்டேர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்த ஆறுகளிலிருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் பிரிந்து சென்று ஒன்றியம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் குட்டைகள் உட்பட நீர்நிலைகள் நிரம்பி வருவது வழக்கம்.

இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக கல்லணை கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதன்மூலம் நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணைக்கு வந்த காவிரிநீர் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகியவற்றின் பாசன வசதிக்கு திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதிக்கு வந்து கடல் முகத்துவாரத்தை ஒட்டி வரை உள்ள ஆறுகளின் தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளும் கடல் போன்று காட்சியளிக்கிறது.


alignment=



இந்த தண்ணீர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், நிலத்தடிநீருக்கும் எந்தவிதமான பிரயோஜனம் இல்லாமல் வீணாக விரைவில் கடலில் கலக்க தயாராக உள்ளது. ஆனால் அதனை சார்ந்த நீர் நிலைகள் இன்னும் வறண்டே காணப்படுகிறது. இதற்கு நீர்நிலைகளின் இணைப்பாக உள்ள வாய்க்கால்கள் தூர்ந்துபோய் கிடப்பதுதான் முழு காரணம். ஒன்றியம் முழுவதும் உள்ள ஊராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் ஒவ்வொரு ஆண்டும் வாய்க்கால்களை தூர் வாருவதாக கணக்கு காட்டுகிறார்களே தவிர ஆனால் பணிகள் நடைபெறாமலே பணம் வேறு வழியில் செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு உதாரணமாக சென்றாண்டு நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஜாம்புவானோடை பாசன வாய்க்கால் தூர் வரப்பட்டது உட்பட ஒன்றியம் முழுவதும் ஊராட்சிகள் சார்பில் பல இடங்களில் தூர் வாரப்பட்டதாக ஒரு விளம்பர பலகை வைத்து மிகப்பெரிய மோசடியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. ஆனாலும் இதில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் பெரும்பாலான பாசன வாய்க்கால்களை பொதுப்பணித்துறை தூர் வாரப்படாததால் இன்று முத்துப்பேட்டை பகுதிக்கு போதுமானதைவிட அதிகளவில் காவிரி தண்ணீர் இருந்தும் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளை நிரப்ப வழியின்றி உள்ளது.


alignment=



அந்தளவிற்கு அனைத்து பாசன வாய்க்காலும் தூர்ந்து மேடுதட்டி கிடக்கிறது. ஏற்கனவே இப்பகுதியில் செல்லும் ஆறுகள் தூர் வாரப்படாமல் உள்ள நிலையில் தற்பொழுது ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் வரும் பட்சத்தில் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி பெரிய ஆபத்தை இப்பகுதி மக்கள் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் அதிகாரிகள் இதுநாள்வரை இப்பகுதியில் தண்ணீரை சேமிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர், நிலைகளும் நிரம்பவில்லை. இதனால் ஏரிகள், குளம், குட்டை நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது.

இதுகுறித்து குன்னலூர் விவசாயி வடுகநாதன் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் இப்பகுதி ஆறுகளையும் பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்கிறோம். ஆனால் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகள் கண்டுக்கொள்வது கிடையாது. தற்பொழுது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் உள்ளது. ஏற்கனவே ஆறுகள் தூர் வாரப்பட்டு இருந்தால் இன்று அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் சென்று இருக்கும். குறிப்பாக குன்னலூர் கிளை பாசன வடிகாலான மாரியாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

அதேபோல் பல்வேறு ஆறுகள், கிளை ஆறுகள் வாய்க்கால்கள் இந்த நிலையில்தான் இருக்கிறது. அதேபோல் ஆற்றில் உள்ள பலபகுதி மதகுகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் பயன்படாமல் வீணாகி யாருக்கும் பயனளிக்காதவகையில் கடலில் செல்லப்போகிறது மட்டுமல்ல முத்துப்பேட்டையில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு வர வாய்ப்புகள் உள்ளது என்பதுதான் உண்மை என்றார்.

Tags : rivers ,Muttupettai , Farmers unhappy, People fear,Muthupettai, Water, Water ponds, lakes
× RELATED அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அய்யாக்கண்ணு போராட்டம்