×

விதிமீறல் பேனர் வழக்கு: ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா சாலையில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றம்

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்றக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று உணவுத்திருவிழாவிற்கு சென்ற முதல்வரை வரவேற்க அதிமுக கொடிகள் கடற்கரை சாலையில் கட்டப்பட்டுள்ளன. சென்னை கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை வரிசையாக அதிமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் தலைவிரித்தாடும் பேனர் கலாச்சாரத்திற்கு சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த விவாகரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக, வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், விதிமீறல் பேனர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாய்  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவிக்க முதலமைச்சருக்கு ஏன் தயக்கம்? என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து, பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என தெரிவித்தனர். இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து, இன்றே காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். மேலும் பேசிய நீதிபதிகள், இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சாலையில் சிந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதிமுக கட்சி கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். கொடிகளை அகற்றி விட்டு பிற்பகலில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த நிலையில், முதல்வரை வரவேற்க கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை 3 அடிக்கு அதிமுக கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மெரினா கடற்கரை சாலையில் கட்டப்பட்டிருந்த அதிமுக கட்சி கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.


Tags : Removal ,AIADMK ,IOC ,road ,Chennai Marina , Infringement banner, Chennai, Marina road, DMK flags, removal
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...