என்ஆர்சி என்ற பெயரில் நெருப்புடன் விளையாட வேண்டாம்: பாஜ.வுக்கு மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா: `‘தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாட வேண்டாம்,’’ என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட விரோத ஊடுருவலை தடுக்கவும், தேச பாதுகாப்பு கருதியும் அசாமில் தேசிய  குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்துவதில்  மத்திய பாஜ அரசு உறுதியாக உள்ளது. இதில் பதிவு செய்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு 3.29 கோடி பேர்  விண்ணப்பித்தனர். அதன் இறுதி வரைவு பட்டியலில் 2.89 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றனர். ஏறக்குறைய 40 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. பின்னர், கடந்த ஜூலை 31ம் தேதி வெளியான என்ஆர்சி இறுதி பட்டியலில் 19 லட்சம்  பெயர்கள் விடுபட்டுள்ளது.

இந்நிலையில், என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், இக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்க மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சாதி, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அசாம் மக்களை போலீஸ், நிர்வாகத்தினரைக் கொண்டு மத்திய  அரசு ஒடுக்கி விட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை அது போன்று அடக்கி ஒடுக்க முடியாது.அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மேற்கு வங்கத்தில் 2 பேரையாவது  தொட்டு பாருங்கள் பார்க்கலாம். குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாஜ.வினர் நெருப்புடன் விளையாடுகிறார்கள். நெருப்புடன்  விளையாடினால் என்ன நேரும் என்பது அவர்களுக்கு உடனடியாக தெரிய வரும். பல ஆண்டுகளாக மேற்கு வங்க மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். மேற்கு வங்க மக்களை பாஜ ஒருநாளும்  பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>