×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் இல்லை: டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்கும் அவசியம் கிடையாது என டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது..ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வரும் 19ம் தேதி  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில்  விசாரணைக்கு ஆஜராவதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவரது மனுவை செப்டம்பர் 12ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.இந்த மனு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில்,  “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தமட்டில் ப.சிதம்பரத்தை தற்பொழுது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் தேவைப்படும்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் குற்றம் சாட்டப்பட்ட  நபரை விசாரிக்கும் முடிவு என்பது விசாரணை அமைப்பின் முடிவை பொறுத்துதான் அமையும்.

அதேபோல் தன்னை குறிப்பிட்ட தேதியில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது என்பதை ஏற்க முடியாது. மேலும் ப.சிதம்பரம் தற்பொழுது நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரால் வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆதாரங்களையும்  அழிக்கவோ அல்லது சாட்சியங்களை கலைக்கவோ முடியாது என்பதால் இந்த காலக்கட்டத்திற்குள் மற்ற தகவல்களை நாங்கள் சேகரித்து கொள்வோம். அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்த அமலாக்கத்துறை அதிகாரிகள்  தற்போது மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. மேலும் அதற்கான அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளனர். இது அவரை புண்படுத்தி அவமானப்படுத்தும் செயலாகும். இது தற்போது உள்ள நீதிமன்ற காவலை நீட்டிக்கவே காவலில்  எடுத்து விசாரிக்க அவர்கள் மறுக்கிறார்கள். குறிப்பாக விசாரணையை சிதைக்க ப.சிதம்பரம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எங்களது தரப்பில் கூறுவதெல்லாம் ஒன்றுதான். இந்த வழக்கில் தாராளமாக ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை  அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தட்டும். இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தானாக வந்து சரணடைந்து அவரது தரப்பு நியாயங்களை சொல்வது என்பது அடிப்படை உரிமையாகும்’’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு கூறுவதாக தெரிவித்தார்.

சிபிஐக்கு நோட்டீஸ்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டும், அதேபோல் இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என்பது சட்டவிதிகளை மீறிய செயல் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  முன்தினம் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்களும் நீதிபதி சுரேஷ் குகார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. முதலாவதாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை எடுத்து விசாரித்த நீதிபதி,  அதுகுறித்து விளக்கமளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பான தற்போதைய நிலை அறிக்கையை அடுத்த ஏழு நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி அடுத்த விசாரணையை வரும்  23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது என தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற காவல் தொடர்பான மனுவை ப.சிதம்பரம் தரப்பில்  வாபஸ் பெறப்பட்டது.



Tags : Chidambaram , INX Media, PC Chidambaram
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...