×

மன்னார் வளைகுடா தீவு பகுதியில் கடல் நீர் விஷமாக மாறியதா?மீன்கள் இறந்து கரை ஒதுங்கின,.. திடீர் நிறமாற்றத்தால் பரபரப்பு

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா தீவு கடல் பகுதியில் நேற்று பாசித்திரள் ஏற்பட்டதால் கடல்நீர் முழுவதும் பச்சை நிறத்தில் மாறியது. மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் கடல் நீர் விஷமாக மாறியதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. பாம்பன் மன்னார் வளைகுடாத்தீவு கடல் பகுதியில் நேற்று பாசித்திரள் நிகழ்வு ஏற்பட்டதால், கடலின் மேல்பகுதியில் பாசிகள் படர்ந்து கடல் நீர் முழுவதும் வெண்பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இது இயற்கையில் வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் கடல் நிறம் மாறியதுடன் மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பாம்பன் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. மன்னார் வளைகுடா கடலில் அமைந்துள்ள குருசடை, சிங்கிலி, பூமரிச்சான் தீவுகளையொட்டிய கடல் பகுதியில் வளரும் தாவரமான ‘ஆல்கல் புளூம்’ எனும் பாசி, இனப்பெருக்கத்திற்காக கடலின் மேல்பகுதியில் படர்ந்ததால் பாசித்திரள் நிகழ்வு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் கடல்மேற்பரப்பில் பாசி படர்ந்ததால், கடல் நீர் முழுவதும் வெண்பச்சை நிறத்தில் காணப்பட்டது. மேலும், அஞ்சாலை, ஓரா, கிலிமீன் உள்ளிட்ட பலவகை மீன்களும் இறந்து, பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது. இதனால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. கடல் நீர் மாறியதுடன் மீன்களும் செத்து ஒதுங்கியதால் கடல்நீரில் விஷம் எதுவும் பரவியுள்ளதா என்று தெரியாமல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் கரையோரத்தில் இறந்து கிடந்த மீன்களை நேற்று பார்வையிட்டனர். பின்னர் மண்டபத்திலுள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், கரையில் செத்து ஒதுங்கிய மீன்களை ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக சேகரித்துச் சென்றனர்.

கடலின் மேற்பரப்பில் அதிகளவில் பாசி படர்ந்ததால் ஒரு சில மீன்களின் செதில்களில் பாசித்துகள்கள் அடைத்து, சுவாசம் செய்ய முடியாமல் இறந்திருக்கலாம். பாசித்திரளால் கடலுக்குள் வாழும் உயிரினங்களுக்கோ, கடலில் உயிருடன் பிடித்து வரப்படும் மீன்களை உண்பதாலோ எந்த பிரச்னையும் ஏற்படாது. கடல் நிறமாற்றம் சில நாட்களில் சகஜநிலைக்கு மாறிவிடும். மீனவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Gulf of Mannar , Gulf of Mannar, sea water, fishes
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு