×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 10 நாளில் தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா கால்வாயில் தற்காலிக சீரமைப்பு பணி தொடக்கம்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 10 நாளில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் தமிழக எல்லைப்பகுதி கால்வாய்களில் தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீர் தர வேண்டும். இதில், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீரும் தர வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு முழுமையாக தண்ணீர் தந்ததில்லை. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போதைய சூழலில் 8 டிஎம்சி நீர் தர முடியாது. ஆனால், 5 டிஎம்சி தருகிறோம் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணம் ஆந்திராவில் உள்ள அணைகள் படிப்படியாக நிரம்பி வருகிறது. இதனால் தற்போது 3,900 கன அடி வீதம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் 6 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். இந்த நிலையில், இன்னும் 10 நாட்களில் கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு திறந்து விட வாய்ப்புள்ளது.இந்நிலையில் தற்போது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை  ஜீரோ பாயிண்டில் இருந்து அம்பேத்கர் நகர் , அனந்தேரி, சிட்ரபாக்கம், போந்தவாக்கம் , கச்சூர், தேவந்தவாக்கம் வரை உள்ள கிருஷ்ணா கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் கால்வாய் சரிந்து ஓடை போல் மாறியுள்ளது கால்வாயின் சிலாப்புகளும் பெயர்ந்து காணப்படுகிறது.எனவே கால்வாயை சீரமைத்து விட்டால் , ஆந்திர அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் போது  தண்ணீர் வீணாகாமல் தமிழகத்திற்கு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 20 தேதி  படத்துடன் செய்தி வெளியானது.

இதைதொடர்ந்து நேற்று முதல் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை  ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை கிருஷ்ணா கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ் மற்றும் பொதுப்பனித்துறை அதிகாரிகள் பிரதீப், சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்ேபாது தமிழக எல்லைக்கு தண்ணீர் வரும் முன்பு தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக கால்வாய்களில் தற்காலிக சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகினறனர்.  இந்த ஆய்வின் போது, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் கூறும் போது, ‘சோமசீலா அணையிலிருந்து கண்டலேறு அணைக்கு தற்போது தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து இன்னும் 10 அல்லது 15 நாட்களில் தமிழகத்திற்கு திறக்கப்படும்’ என்றார்.

Tags : Krishna Canal , Kandalengar dam, Tamil Nadu, water opening, Krishna Canal
× RELATED முதல்வர் துவக்கி வைத்த திட்டத்தில் 93...