×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரங்கள் வெட்டப்படும் அவலம்

திருப்பூர் :திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுநடவு செய்யப்படும் என எதிர்பார்க்கபட்ட நூற்றாண்டு மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாநகரம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் டவுன்ஹால் பகுதியை முற்றிலுமாக அகற்றிவிட்டு அங்கு கூட்டஅரங்கு மற்றும் நவீன பார்கிங் வசதி அதே போல் பழைய பேருந்து நிலையத்தில் மாற்றி அமைத்தல் மற்றும் மாநகரின் பகுதிகளில் பூங்கா வசதி செய்தல் போன்றவற்றை ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செய்து வருகின்றனர். அதன் முதல்கட்ட பணியாக டவுன்ஹால் பகுதியை முற்றிலுமாக தடைமட்டப்படுத்தி அங்கு கூட்டஅரங்கு மற்றும் நவீன பார்க்கிங் வசதிகாக பணிகளை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் இந்த டவுன்ஹால் பகுதியில் பணிகள் நடைபெறும் இடத்தில் சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த பல மரங்கள் உள்ளது. இந்த மரங்களை மறுநடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இரவு நேரங்களில் டவுன்ஹால் பகுதியில் குழிதோண்டும் பணிகளை செய்வதால் மரங்களை இரவோடு இரவாக வெட்டி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 32-வது இடத்தில் உள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நூற்றாண்டு மரங்களை வெட்டி விடாமல், அவற்றை மறுநடவு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை  வைக்கப்படுகிறது.

 இதுகுறித்து கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறும் போது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிந்தவரை மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மரங்கள் மறுநடவு செய்யப்படும் என்ற அறிவிப்பை மீறி டவுன்ஹால் பகுதியில் மரங்களை வெட்டுபடுவது என்பது அதிர்ச்சியாக உள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல பசுமை வளர்ச்சிக்கும் தான் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

 மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் கேட்டபோது: மரங்களை மறுநடவு செய்ய திருப்பூரில் உள்ள தன்னார்வலர்களிடம் கேட்டோம். அப்போது அவர்கள் பால் மரங்கள் (ஆலமரம், அரசமரம்) மட்டும் தான் வளருவதாக கூறினார்கள். வேறு மரங்கள் வளருவதில்லை எனவும் கூறுகிறார்கள்.  ஒரு மரத்தை மறுநடவு செய்ய சுமார் 70 ஆயிரம் வரை செலவுகள் ஆகின்றது. அதற்கு பதிலாக பல மரங்களை நடவு செய்யும் பணியில் உள்ளோம்.  மரங்களை மறுநடவு செய்ய தன்னார்வலர்களை கேட்டுள்ளோம். மரங்கள் வெட்டாமல் இருக்க உத்தரவிடுகிறோம். இவ்வாறு கூறினார்

Tags : Tirpur,Smart City, Trees,
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ