×

திறந்தவெளியில் அடுக்கி வைத்ததால் மழைக்கு நெல் மூட்டைகள் நாசம்-வாணிபக் கிடங்கில் அதிகாரிகள் அலட்சியம்

திருமங்கலம் : திருமங்கலம் அருகே, கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டி திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையால் நாசமாகியது, விவசாயிகளிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டியில் திறந்தவெளி வாணிபக் கிடங்குகள் உள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளையும் நெல் இங்கு இருப்பு வைக்கப்பட்டு, ரைஸ் மில்லுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக அரைக்கப்படும். பின்னர் திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக, இந்த மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டி திறந்தவெளி வாணிபக் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூட்டைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் பாய்கள் கொண்டு மூடப்படாமல் இருந்தன. இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் திறந்தவெளி கிடங்குகளில் இருந்த நெல்மூட்டைகள் மழைக்கு நனைந்து சேதமாகியுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்திருப்பது விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்தநிலையில் நெல் மூட்டைகள் மழையால் நனைந்தது அறிந்த அதிகாரிகள், கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டி வாணிபக் கிடங்குகளில் நேற்று ஆய்வு நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கிடங்கில் அடுக்கி வைப்பட்டிருந்த நெல்மூட்டைகள் சரிந்து விழுந்துள்ளன. மூட்டைகளும் மழையால் நனைந்துள்ளன. இதன் விவரங்களை கணக்கெடுத்து வருகிறோம். சரிந்த மூட்டைகளில் உள்ள நெல்களை காயவைத்து மீண்டும் அடுக்கிவைக்கும் பணிகளை துவக்கியுள்ளோம். இரவு வேளையில் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் இரண்டு கிடங்குகளிலும் தார்பாய்களை கொண்டு நெல்மூட்டைகளை மூடுவதற்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்றனர். இது குறித்து உச்சப்பட்டியை சேர்ந்த விவசாயி கல்யாணசுந்தரம் கூறுகையில், ‘இந்தாண்டு விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே விவசாயம் செய்துள்ளனர். வெயில் காலத்தில் மழை வராது என அலட்சியமாக அதிகாரிகள் செயல்பட்டதால்தான் தற்போது நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. திறந்தவெளி கிடங்குகளில் மூட்டைகளை கண்காணித்து பாதுகாத்து வைக்க வேண்டும். அதிகளவில் மூட்டைகள் வந்தவுடன் அவற்றை அரவைக்கு அனுப்பியிருந்தால் இது போன்ற பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம். தற்போது மழையால் நனைந்த நெல் மூட்டைகளால் தயராகும் ரேஷன் அரிசி தரமற்றதாகவே இருக்கும்’ என்றார்….

The post திறந்தவெளியில் அடுக்கி வைத்ததால் மழைக்கு நெல் மூட்டைகள் நாசம்-வாணிபக் கிடங்கில் அதிகாரிகள் அலட்சியம் appeared first on Dinakaran.

Tags : Nasam-Vayipak ,Tirumangalam ,Thirumangalam ,Kapalur ,Austinpatti ,Bundles ,of ,Nasam-Warehouse ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே பரிதாபம் வாகனங்களில் சிக்கி புள்ளி மான்கள் பலி