×

தகவல் பலகையில் தினமும் ஒரு இந்தி வாக்கியம்: வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இந்தி திணிப்பு

வேலூர்: வேலூர் தலைமை தபால் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு இந்தி வாக்கியத்தை எழுதி வருவதால் தமிழ்மொழி புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் சமீபகாலமாக இந்தி மொழியை அனைத்து வகையிலும் திணிக்கப்படுகிறது. குறிப்பாக ரயில் நிலையங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள், வங்கிகள், தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்தி புகுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் தேர்வுகளிலும் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களிலும் இந்திமொழி சத்தமில்லாமல் திணிக்கப்பட்டு வருகிறது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் உள்ள தகவல் பலகையில் ஒவ்வொரு நாளும் ஒரு இந்தி வாக்கியம் எழுதி அதற்கு கீழ் ஆங்கில வார்த்தை எழுதி வருகின்றனர். ஆனால் தமிழ் வாக்கியம் எழுதாமல் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஒருசில அரசு அலுவலகங்களில் தமிழ்மொழியில் ஒவ்வொரு நாளும் பொன்மொழிகள், திருக்குறள் போன்றவையும் அதற்கான விளக்கத்தையும் எழுதி வருகிறன்றனர். சில இடங்களில் ஆங்கில மொழியில் எழுதியும், அதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மத்திய அரசின் அலுவலகமான தபால் நிலையத்தில் தினந்தோறும் ஒரு இந்தி வார்த்தை எழுதி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர். தமிழ்மொழி எழுதுவது கிடையாது. ஒரு மொழிக்கு மாற்றாக அம்மாநிலத்தில் பேசும் மொழியைத்தான் எழுத வேண்டும். ஆனால் இந்தி, ஆங்கிலம் எழுதி வைத்து தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இங்குள்ள உயர் அதிகாரிகளும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் குறைகளை எடுத்து சென்றாலும் அது அவர்களுக்கு புரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய அரசு அலுவலகத்தில் இந்தி திணிக்கப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. உடனடியாக இந்தியை நீக்கி விட்டு தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Vellore Chief ,Post Office , Hindi stuffing, post office
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு