×

தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றத்துக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை கடும் பாதிப்பு

சென்னை: தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று வக்கீல்கள் நீதிமன்றங்களை புறக்கணித்துள்ளனர். இதனால் வழக்கு விசாரணை  கடுமையாக பாதிக்கப்பட்டன.  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் குழு கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.  இந்தியாவின் மிகப் பெரிய உயர் நீதிமன்றமான 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து இந்தியாவின் மிகச் சிறிய நீதிமன்றமான 3 நீதிபதிகள் கொண்டு மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை மாற்ற பரிந்துரை செய்திருப்பது நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றம் செய்ததற்கு வக்கீல் சங்கங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைமை நீதிபதி தஹில் ரமானி தன்னை மாற்றம் செய்யும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது தலைமை நீதிபதி பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இதையடுத்து, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி வரவில்லை. அவரது நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட 75 வழக்குகள் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி அடங்கிய இரண்டாவது அமர்வுக்கு மாற்றப்பட்டது.  இந்நிலையில், தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வக்கீல்கள் சங்கம், லா அசோசியேஷன், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் ஆகியவை தீர்மானம் நிறைவேற்றின.

அதன் அடிப்படையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றங்கள், சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் உயர் நீதிமன்றம் ஆவின்கேட் அருகே ஏராளமான வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் வக்கீல்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்க தலைவி வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தலைமை நீதிபதி இடமாற்றத்தை திரும்பப் பெற மத்திய அரசையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால், என்.எஸ்.சி.போஸ் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி எம்.எல்.ஜெகன், சங்கத் தலைவர் கருணாகரன், செயலாளர் விஜயகுமார், வக்கீல் சரசமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதுடன் ராஜாஜி சாலையில் ஆர்பாட்டமும் நடத்தினர்.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தையடுத்து தலைமை நீதிபதி நேற்றும் இரண்டாவது நாளாக நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவரது நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வழக்குகள் 2வது மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வுக்கு மாற்றப்பட்டது. பெரும்பாலான நீதிமன்றங்களில் அரசு வக்கீல்கள் மட்டுமே ஆஜராகினர். வக்கீல்கள் நீதிமன்றத்தை முழுவதுமாக புறக்கணித்தனர். இதனால் நேற்று பட்டியலிடப்பட்ட வழக்குகளில் 90 சதவீத வழக்குகளை விசாரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் வராததால், நீதிமன்றங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

Tags : Dahil Ramani ,Supreme Court , Chief Justice of India Tahil Ramani, Tamil Nadu
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...