×

நெல்லை அருகே அழகியபாண்டியபுரம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் அலையும் அவலம்

மானூர்: மானூர் அருகே அழகியபாண்டியபுரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் கிராமமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகியபாண்டியபுரம் ஊராட்சி சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது. பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சிப் பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர். வடகிழக்கு பருவ மழையை நம்பி விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கிராமத்தின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் சிற்றாறு மூலம் இங்குள்ள நீர்நிலைகளும் தண்ணீர் கிடைக்க பெறுகின்றன.

ஆனால், பல்லாண்டுகளாக பருவமழை சரிவர இல்லாததால் சிற்றாறு மட்டுமின்றி இதை நம்பியுள்ள பாசன குளங்களும் வறண்டுள்ளன. அத்துடன் கிணற்றுப் பாசன விளைநிலங்களும் தண்ணீரின்றி வறண்டதால் வேளாண் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. அத்துடன் மானூர் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரம் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் குடிநீர் தேடி குடங்களை தூக்கிக்கொண்டு கசிவு குட்டைகளை தேடியும் கிணறுகளை தேடியும் அலைந்து திரியும் அவதி தொடர்கிறது. இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘பல்லாண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்குள்ள விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக வறண்டுள்ளன.

இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிராமம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் பாராமுகமாக இருந்து வருகிறது. 5 அல்லது 7 நாட்களுக்கு ஒரு முறை மிகவும் குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் ஒருவருக்கு தலா 1 குடம் குடிநீர் கூட கிடைப்பது அரிதாக உள்ளது. இவ்வாறு தட்டுப்பாடுடன் வழங்கப்படும் குடிநீர் ஓரிரு நாளிலேயே காலியாகி விடுகிறது. இதனால் சுமார் 1 கி.மீ. தொலைவில் விளைநிலப்பகுதிகளில் உள்ள கிணறுகளைத் தேடி செல்லும் நாங்கள், படு பாதாளத்தில் கலங்கிய நிலையில் உள்ள தண்ணீரை கயிற்றின் துணையுடன் வாளிகளில் இறைத்து சேகரித்து சுமந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அதுவும் தற்போது ஆடிமாதம் போல் வீசும் பலத்த காற்றால், கைப்பிடி இல்லாத கிணறுகளில் நின்று தண்ணீரை இறைப்பது மிகவும் ஆபத்தாக உள்ளது. அதிலும் அந்த கிணற்றில் விவசாய மோட்டார் இயங்கினால் அந்த தண்ணீரும் வற்றி விடுகின்றன. மீண்டும் தண்ணீர் ஊறுவதை பார்த்து இறைத்து எடுக்கும் நிலை உள்ளது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, அழகியபாண்டியபுரம் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முன்வர வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்.

Tags : village ,paddy field , Paddy, Pazhayapandiyapuram, drinking water shortage
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...