×

மீனாட்சி கோயில் ஆவணி மூலத் திருவிழா: இன்று ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திரு விழாவை முன்னிட்டு, இன்று ஈசனின் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நடந்தது. நாளை விறகு விற்ற லீலை நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை மையமாகக் கொண்ட இவ்விழாவின் 9ம் நாளான இன்று இறைவன் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ திருவிளையாடல் நடந்தது. ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டிலுள்ள சொக்கநாதர் கோயிலில் நடந்த பிட்டுத் திருவிழாவிற்காக காலை 6 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மேள, தாளங்கள் முழங்க பரிவாரங்களுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்பு வந்தனர்.
 
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் புட்டுத்தோப்பில் குவிந்தனர். பல வகையான புட்டு விற்பனை நடந்தது. மதியம் 1.30 மணிக்கு மேல் சொக்கநாதர் கோயிலில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலையை’ பட்டர்கள் அரங்கேற்றினர். அப்போது சுவாமி சுந்தரேஸ்வரர் தங்க தட்டில் மண் சுமக்கும் கோலத்தில் பிரியாவிடையுடன் காட்சியளித்தார். பட்டர்கள் சுவாமியாகவும், மன்னனாகவும் வேடமிட்டு திருவிளையாடலை அரங்கேற்றினர். சுவாமியாக வேடம் அணிந்த பட்டர், வந்திக்காக அளந்து விட்ட கரையை அடைக்காமல் தூங்குவது, மன்னராக வேடமிட்ட பட்டர் பொற் பிரம்பால் சுவாமியாக வேடமிட்ட பட்டரை அடிப்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நிகழ்த்தி காட்டப்பட்டன.  

பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் தனித்தனியே வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தனர். விழாவின் 10ம் நாளான நாளை விறகு விற்ற லீலை திருவிளையாடல் நடக்கிறது.

Tags : Meenakshi Temple ,Avani Source Festival , Meenakshi Temple, Avani Source Festival
× RELATED மீனாட்சி கோயில் நவராத்திரி விழா அக்.15ல் தொடக்கம்