×

நவ.11-ம் தேதி தேசிய கல்வி தினம்: புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு திட்டம் என தகவல்

டெல்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு, தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை’ கடந்த 1986ம் ஆண்டு  கொண்டு  வரப்பட்டது. பின்னர், அது 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதுவே,  தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு கடந்த  2014ம் ஆண்டே அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ   முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது. நீண்ட கால தாமதத்துக்குப் பின்,  அந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. அந்த புதிய வரைவு   கொள்கையை, புதிதாக பொறுப்பேற்ற மத்திய  மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். இந்த வரைவு திட்டம் குறித்து இம்மாதம் 30ம் தேதி வரை மக்கள்  தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை   தெரிவிக்கலாம் என கூறினார்.

அந்த வரைவு கொள்கையில், ‘மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய் மொழி,  ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசும்   மாநிலங்களில், ஆங்கிலத்துடன், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை  கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட  தென்   மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ‘இது வரைவு கொள்கைத்தான். இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய மொழிகளை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம்.  எந்த மொழியையும் திணிப்பது நோக்கம் அல்ல,’  என் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூறினர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 3-ம் தேதி தேசிய கல்வி கொள்கை வரைவு திருத்தப்பட்டு 6-ம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், இந்தி கட்டாயம் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து, வரைவு கல்விக்  கொள்கை மீது ஆலோசனைகளை வழங்க ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 2 லட்சத்திற்கு மேற்பட்ட கருத்துக்கள் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்தார்.

குறிப்பாக 1 லட்சத்து 10 ஆயிரம் கருத்துகள் கிராம கல்வி சபைகளிடம் இருந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த கருத்துக்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 15 குழுக்கள், வரைவு அறிக்கையில் என்னென்ன மாற்றங்களை  மேற்கொள்வது என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இறுதி செய்யப்பட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்து வரும் 25-ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மத்திய  அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் உடன் வரும் நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி தினத்தன்று புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள்  தெரிவித்துள்ளர்.

Tags : National Education Day ,Central Government Announces New Education Policy , National Education Day, New Education Policy, Central Government
× RELATED எஸ்கேவி வித்யாஸ்ரம் பள்ளியில் தேசிய கல்வி நாள் அனுசரிப்பு