×

ராஜினாமா எதிரொலி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் வழக்குகள் இன்று விசாரணை இல்லை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த  சஞ்சய் கிஷன் கவுல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த தலைமை நீதிபதி பதவிக்கு மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி தாஹில்  ரமானி நியமனம் செய்யப்பட்டார்.  2018 ஆகஸ்ட் மாதம் தாஹில் ரமானி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்ற தமை நீதிபதியாக பணியாற்றிவந்த தாஹில் ரமானி உச்ச  நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இவருக்கு ஜூனியரான உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், தாஹில் ரமானி அதிருப்தியில்  இருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தாஹில் ரமானியை மேகாலயா உயர்  நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்தியாவில் மிகப்பெரிய 3 உயர் நீதிமன்றங்களில் ஒன்றான, அதாவது 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா  நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி தாஹில் ரமானியை மாற்றம் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 4.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆனால் வெறும் ஆயிரத்து 400 வழக்குகள் கொண்ட சிறிய நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதனால், தன்னை மேகாலயாவுக்கு மாற்றம் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு  தலைமை நீதிபதி தாஹில் ரமானி கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு நிராகரித்து விட்டது. தொடர்ந்து, தலைமை நீதிபதி தாஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் விதிமீறல் கட்டடங்கள், நில ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி நடவடிக்கை உட்பட 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  தஹில் ரமானி அமர்வில் இன்று விசாரணை இல்லை என்று நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Dahil Ramani ,Madhya Pradesh High Court , Echoing resignation: Madhya Pradesh High Court Chief Justice Dahil Ramani
× RELATED ம.பி.யில் பெண் நீதிபதிகள் 6 பேர் பணி...