×

முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மரணம்: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி (95), நேற்று காலமானார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சட்ட அமைச்சராக பதவி வகித்தவர் ராம் ஜெத்மலானி.  உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் இவர் பணியாற்றினார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 7.45 மணிக்கு அவர் இறந்தார். வரும் 14ம் தேதி இவருக்கு 96வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் டெல்லியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. ராம் ஜெத்மலானி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் கடந்த 1923ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி பிறந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் மும்பை வந்தது. ராம் ஜெத்மலானிக்கு 1947ல் ரத்தனா  என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. பின்னர், துர்க்கா என்பவரை 2வதாக  திருமணம் செய்தார்.

பா.ஜ.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக பிரிந்து, 2004ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு  தோல்வி அடைந்தார். பின்னர், அரசியலில் இருந்து விலகி, வழக்கறிஞர் பணியை  தொடர்ந்து மேற்கொண்டார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கிய வழக்கறிஞர்களில்  ராம் ஜெத்மலானியும் ஒருவர். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில்  முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜிவ்  கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். மறைந்த ராம் ஜெத்மலானிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம்ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘மிகச்சிறந்த சட்ட நிபுணரை நாடு இழந்து விட்டது’ என கூறியுள்ளார். பிரதமர் மோடி, ‘ராம் ஜெத்மலானி. எந்த விஷயத்திலும் தனது கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர்’’ என்று கூறியுள்ளார். இேதபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Death ,Ram Jethmalani ,Union minister ,leaders ,President , Death , Union minister, senior lawyer Ram Jethmalani, condolences of President, Prime Minister and leaders
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...