×

திருவாரூர் ஆழித்தேருக்கு கண்ணாடிக்கூண்டு அமைக்கும் பணி மந்தம்: பக்தர்கள் வேதனை

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேருக்கு கண்ணாடிக்கூண்டு அமைக்கும் பணி மந்தமாக நடப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் தலமாகவும் இருந்து வருகிறது. இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய 2வது தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தேரோட்டத்திற்காக  ஆழித்தேரின் மேற்கூரை பிரிக்கப்பட்டு பின்னர் மூடப்படும் நிலையில் மற்ற காலங்களில் தேரினையும், தேரில் உள்ள அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மரசிற்பங்களையும் பொதுமக்களும், பக்தர்களும் முழுமையாக பார்க்கமுடியாத நிலை இருந்து வருவதால் இந்த தேரினை கண்ணாடி கூண்டு கொண்டு மூட வேண்டும் என்று பக்தர்கள் வைத்த வேண்டுகோளின் படி ரூ 40 லட்சம் மதிப்பில்  கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம்  துவங்கப்பட்டது.  அதன்படி  தேரின் 4 பக்கமும் முதலில் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் தேரின் மேல்பாகம் வரையில் இரும்பு பட்டைகள் கொண்டு கூரை அமைக்கும் பணி  நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேதி தேரோட்டம் நடைபெற்றதன் காரணமாக கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.  தேரோட்டம் நடைபெற்று முடிந்து  4 மாதம் கடந்துள்ள நிலையில் தற்போது கண்ணாடி கூண்டு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தாலும், இது ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Thiruvarur Alizhir , Thiruvarur, Alicheether, Glass Cage, Mantham
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...