×

ஆவூர் அருகே அரசு குவாரியில் மணல் கொள்ளையால் 6,000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு: லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: ஆவூர் அருகே அரசு குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வராமல் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மணல் அள்ளிய லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே மதயானைப்பட்டி கோரையாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. சுமார் 12 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் குவாரியில் அனுமதிக்கப்பட்ட 1 மீட்டர் ஆழம், சுமார் 800 மீட்டர் நீளத்துக்குப் பதிலாக 10 மீட்டர் ஆழம் மற்றும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் லாரிகளில் மணல் அள்ளி அங்கிருந்து விராலிமலை அருகே உள்ள அரசு மணல் கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு மணல் வழங்கப்படுகிறது. இந்த பணியை பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று குவாரியில் இருந்து வழக்கம்போல பொக்லைன் மூலம் மணல் அள்ளி லாரிகளில் அனுப்பினர். அப்போது ஆவூரை சேர்ந்த மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். இங்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளதால் கோரையாறு பகுதி பள்ளமாகி உள்ளது. மழைகாலங்களில் கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீர் இந்த இடத்தில் உள்ள கால்வாய் வழியாகத்தான் ஆவூர் பெரியகுளத்திற்கு பிரிந்து செல்லும்.

இந்த பகுதியில் அதிக அளவு ஆழத்தில் மணல் அள்ளினால் குளத்திற்கு எப்படி தண்ணீர் போகும். இதனால் சுமார் 6,000 ஏக்கரில் பாசனம் மேற்கொள்வது கேள்விக்குறியாக உள்ளது என்று கூறியவாறு மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு நின்ற 20க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் விராலிமலை தாசில்தார் சதீஸ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

Tags : Government Quarry ,Avur , Impact of Avur, Government Quarry, Sand Loot and Agriculture
× RELATED வேலூர் மாவட்டத்தில் அரசு குவாரி...