×

முன்னாள் மத்திய அமைச்சரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்தவரான ராம் ஜெத்மலானி(95), வயது முதிர்வு காரணமாக  உடல்நலமில்லாமல் இருந்தார். இதனால், ஜெத்மலானிக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார். ராம் ஜெத்மலானி 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி பாகிஸ்தானின் சிந்த்  மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை வந்தது அவரது குடும்பம். 18-ம் வயதிலேயே சட்டப்படிப்பை முடித்த ஜெத்மலானி, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய,ராம் ஜெத்மலானி, பாஜகவில் இணைந்து இரண்டு முறை, மக்களவை உறுப்பினராக தேர்வானார். 1998-ம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை மற்றும் நீதித்துறை, நகர்ப்புற  வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். பின்னர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 2004-ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்து அரசியலில் இருந்து விலகி, வழக்கறிஞர் பணியை  தொடர்ந்து செய்தார். பல முக்கிய வழக்குகளில் ராம் ஜெத்மலானி வாதிட்டுள்ளார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ராம் ஜெத்மலானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் மற்றும்  உயர்நீதிமன்றங்களில் முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். 2-ஜி வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். 2010-ம் ஆண்டு மீண்டும் அவர் பாஜகவுக்கு திரும்பி, மாநிலங்களவை எம்.பி. ஆனார்.  பாஜகவில் பிரதமர் மோடி தலைமைக்கு வந்ததும், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர், சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் வழக்கறிஞர் பணியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று காலை  தனது வீட்டில் வயது முதிர்வு காரணமாக காலமானார். மறைந்த ராம் ஜெத்மலானிக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Tags : Ram Jethmalani ,Union minister ,Leaders ,Supreme Court , Former Union minister and Supreme Court senior lawyer Ram Jethmalani passes away: Leaders condolences
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...