துப்பாக்கி முனையில் வழிப்பறி: 2 பேர் கைது

சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வசிப்பவர் வாசு (60). இவர் நேற்று முன்தினம் மாலை மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சீமாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்று மேம்பால சர்வீஸ் சாலையில்  சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து,  துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த 300ஐ பறித்துக்கொண்டு, தப்பினர்.அப்போது, மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட  கும்மிடிப்பூண்டி போலீசார், பைக்கில் தப்பி ஓட முயன்ற அந்த 2 பேரை விரட்டி பிடித்து,  மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் இருவரும் புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (எ) போண்டா மணி (28), வெங்கல் பகுதிகோடுவல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் (28) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கத்தி, துப்பாக்கி  முனையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் வாகனங்களில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, துப்பாக்கி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>