×

அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல்

* பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள்
* பிரச்னைக்கு தீர்வு காணுவது எப்போது?

சென்னை: அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பிப்ரவரி 13ம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு  திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின்படி வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் விண்ணப்பித்து, பொதுமக்கள் குறிப்பிடும் தேதிகளில் பத்திரம் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த ஆன்லைன் பதிவில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக, ஆன்லைனில் வி்ண்ணப்பித்தால் கூட இடைத்தரகர்கள் அழைத்து வருபவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் பத்திரம் பதிவு செய்து வருவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, பதிவுத்துறையில் வரிசைப்படி பத்திரப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. அதாவது, பத்திரம் பதிவு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு டோக்கன் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு டோக்கன் எண் அடிப்படையில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவின் போது அடிக்கடி சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் ஏற்படும் சர்வர் பிரச்னை காரணமாக பத்திரம் பதிவு செய்து தருவதில் தாமதம் ஏற்படுவது தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது. இதனால்,  காலையில் பதிவுக்கு வரும் மக்கள் மாலையில்தான் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.இந்த சர்வர் பிரச்னை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சார்பதிவாளர்கள் புகார் தெரிவித்தும், இப்பிரச்னையை தீர்க்க தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சார்பதிவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுகுறித்து சார்பதிவாளர்கள் கூறும் போது, ‘சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிய வரும் மக்கள் 10 நிமிடத்தில் பதிவு செய்து திருப்பி தர வேண்டும் என்று ஐஜி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சர்வர் பழுது காரணமாக பதிவு செய்வதே பிரச்னையாக உள்ளது. சில அலுவலகங்களில் கணினி ஆபரேட்டர்கள் தகுதியானவர்களை நியமிக்கவில்லை. அவர்களாலும் சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதுவும் தாமதத்திற்கு  காரணம்’ என்றனர்.

Tags : Due,frequent server , online bookkeeping
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...