×

இருக்கை வசதிக்கு ஏற்ப குழந்தைகள் ஏற்றப்படுகிறார்களா? பள்ளி வாகனங்களை இடைமறித்து ஆய்வு செய்ய வேண்டும்: ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உத்தரவு

நாகர்கோவில்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் ஆசிரியர் பயிற்றுநர்களின் வரையறுக்கப்பட்ட பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் பல்வேறு விதிமுறைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில் ஆசிரியர்களின் பணிகள் தொடர்பாக கூறியிருப்பதாவது:*இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன்படி பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளை பள்ளி வரைபட பயிற்சி மற்றும் புவியியல் தகவல் முறைமை மூலம் கண்டறிய வேண்டும். இதில் தேவையின் அடிப்படையில் புதிய தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்க பள்ளிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதி மற்றும் உண்டு உறைவிட பள்ளிகள், விடுதிகள் போன்ற வசதிகளை உரிய முறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆண்டு வரைவு திட்டத்தில் உட்படுத்த வேண்டும்.*உயர்நிலை, மேல்நிலை அளவில் தேவையின் அடிப்படையில் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் நடுநிலை, உயர்நிலை, பள்ளிகளை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளாக அருகாமை பள்ளி விதிகளின்படி தரம் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான பள்ளிகளை கண்டறிந்து உரிய முறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் ஆண்டு வரைவு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

*தேவையின் அடிப்படையில் கூடுதல் வகுப்பு, பிரிவுகள், பாட பிரிவுகள், தொழிற்கல்வி உட்பட தொடங்கி தேவைப்படும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை கண்டறிதல் வேண்டும். *அனைத்து நிலை பள்ளிகளிலும் 100 சதவீத மாணவர் சேர்க்கை மற்றும் தக்க வைத்தலை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொளுதல், கிராம அளவிலும், வட்டார அளவிலும் கல்வி விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல் வேண்டும்.*போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதி செய்து தரப்பட்டுள்ள பள்ளிகளை காலை 9 மணி அளவிலும், மாலை 4 மணி அளவிலும் பார்வையிடுதல் வேண்டும். தொடர்ந்து பள்ளி பார்வை மேற்கொண்டு ஆவணங்களை பார்வையிட்டு முறையாக நிதி செலவிடப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.


*பார்வை மேற்கொள்ளும் அலுவலர்கள் பள்ளிகளில் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதியப்பட்டுள்ள விபரம், எப்சி காலாவதியாகாமல் உள்ள விபரம், முறையான ஓட்டுநர் உரிமத்துடன் ஓட்டுநர் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனங்களில் இருக்கை வசதிக்கு தகுந்தாற்போல் குழந்தைகள் ஏற்றப்படுகின்றனரா? என்பதையும், சாலை வளைவுகளில் வாகனங்கள் சீரான வேகத்தில் செல்கிறதா? என்பதையும் பார்வையின்போது வாகனங்களை இடைமறித்து ஆய்வு செய்து உறுதி செய்தல் வேண்டும்.

*குடியிருப்புகளுக்கு சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கையை தக்க வைத்தல், பள்ளி படிப்பை முடிக்க செய்தல் ஆகிய குறிக்கோள்களை நூறு சதவீதம் அடையும் வகையில் வீட்டு கணக்கெடுப்பு, பள்ளி தகவல் ஆகியவற்றை பராமரித்து புதுப்பித்தலை உறுதி செய்ய வேண்டும். *வீடு வாரியாக பள்ளி வயது குழந்தைகளையும், பள்ளிக்கு வெளியில் உள்ள பள்ளி சேராத மற்றும் இடைநின்றவர்களையும் துல்லியமாக கணக்கிட்டு அவர்களை மாற்று பள்ளிகள், இணைப்பு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். *ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொருவரும் செயல்திறன் குறைந்த பள்ளிகளில் 5 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்துதல், அதற்காக கண்காணிப்பு குழு அமைத்தல் அவசியம். வட்டார அளவில் திட்ட செயல்பாடுகளை முறையாக செயல்படுத்திட பிற அரசு துறைகளுடனும், சுய உதவி குழுக்களுடனும் அரசு சாரா அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும். கிராம, வட்டார அளவிலான திட்ட அறிக்கைகளை தொகுத்து தயாரித்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : children ,teacher instructors , Are children, seating arrangement, School vehicles must ,inspected: Directive , teacher instructors
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...