×

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த விரும்பும் ஒரே நாடு இந்தியா: மக்களை காக்க எதுவும் செய்வோம்...பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி

டெல்லி: காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கின்றனர் என முற்றிலும் நம்புகிறேன் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இல்லை. சிறப்பு பாகுபாடு காட்டும் பிரிவாக இருந்தது. இந்த அந்தஸ்தை நீக்கியதுடன், மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்துள்ளோம்  என்றார். மாநிலத்தில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் உள்ள 199 போலீஸ் மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் உள்ளன. 92.5 சதவீத பகுதிகள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.  தரைவழி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

காஷ்மீரில், மொபைல் மற்றும் இணையதள சேவையை பாகிஸ்தான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும். பயங்கரவாதிகள் தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதனால், தான் அது தடை செய்யப்பட்டு உள்ளது. மொபைல்  மற்றும் இணையதள சேவையை தடை செய்ததால், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இவை வருவதற்கு முன்னர், மக்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர் என்று கூறினார்.  சிறப்பு சட்டம், காஷ்மீர் கழுத்தை சுற்றி  இருந்ததால், இந்தியாவில் மற்ற மக்களுக்கு கிடைத்த சலுகைகள், அவர்களுக்கு கிடைக்கவில்லை. கல்விக்கான உரிமை சட்டம், பெண்கள் உரிமை சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்கள், பிற மாநிலங்களில் அமலானாலும், இங்கு  அமலாகவில்லை. சிறப்பு சட்டத்தை, ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கருவியாக அரசியல் கட்சிகளுக்கு பயன்பட்டது. சாமான்ய மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தலைவர்கள் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த அஜித் தோவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவது இயற்கை தான். இதற்கு சட்டத்திலும் இடம் உள்ளது என்றார். அரசு, நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல  வேண்டியிருக்கும். நீதித்துறையை தாண்டி ஏதாவது செய்தால், அதற்கு அதிக அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என்றார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட முடிவை பெரும்பாலான மக்கள் ஏற்று கொண்டு உள்ளனர். சிறப்பு அந்தஸ்து  நீக்கப்பட்டதன் மூலம், சிறப்பான எதிர்காலம் பெரிய வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர்கள் பார்க்கின்றனர். கொஞ்சம் பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது மக்களின் குரல் என்பது போல் மக்களுக்கு  தோன்றுகிறது. ஆனால், இது உண்மை அல்ல என்றார்.

மேலும் பேசிய அவர், காஷ்மீரில், பிரச்னை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்கிறது. அங்கு பதற்றம் நிலவுகிறதை விரும்புவதுடன் இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறது. இதற்காக, காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ  செய்கின்றது. இதன் மூலம், பிரச்னை ஏற்படுத்தி அமைதி ஏற்படுவதை தடுக்க நினைக்கிறது. காஷ்மீரில், அமைதி ஏற்படுத்த விரும்பும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. பாகிஸ்தானின் சூழ்ச்சிக்கும், எல்லைக்கு அப்பாலில் இருந்து வரும்  குண்டுகளுக்கு மக்கள் பலியாவதை அனுமதிக்க முடியாது. மக்களை காக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, உள்ளூர் போலீசாரும், துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், ராணுவம் மக்களிடம் அத்துமீறுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதே  நமது பணி என்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 230 பயங்கரவாதிகள். இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் ஊடுருவி உள்ளனர். அவர்கள், பிரச்னை ஏற்படுத்தவும், வணிகர்களும், பொது மக்களும் தங்களது பணியை  செய்வதை தடுக்கவும் முயற்சி செய்கின்றனர். காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்வதையும், அமைதியாக  இருந்தால், காஷ்மீரில் அமைதி திரும்பும் என்றார்.


Tags : India ,Kashmir , India is the only country that wants peace in Kashmir: We will do anything to protect the people ... Interview with Defense Advisor Ajit Doval
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!