×

கர்நாடகாவில் பணியாற்றி வந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா : மத்திய அரசை கண்டித்து விலகும் மூன்றாவது உயர் அதிகாரி இவர்

பெங்களூரு : கர்நாடகாவில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். ‘கொள்கைக்கு விரோதமாக செயல்பட மனம் ஒப்புக் கொள்ளாததால் பதவியை ராஜினாமா  செய்கிறேன்,’ என தென்கனரா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மத்திய அரசை கண்டித்து கடந்த 2 மாதங்களில் கர்நாடகாவில் பதவி விலகிய 3வது உயரதிகாரி இவர் ஆவார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பல ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகள், கர்நாடகாவில்  பணியாற்றி வருகின்றனர். மாவட்ட கலெக்டர்கள், எஸ்பி.க்கள் பல்வேறு முக்கிய பதவிகளை அவர்கள் வகித்து வருகின்றனர். ஆனால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், இம்மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். மத்திய அரசின் மீதும், பாஜ அரசின் மீதும் குற்றம்சாட்டி இவர்கள் பதவி விலகுகின்றனர். இது, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும், மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.  

கர்நாடகாவில் மிகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, 2 மாதங்களுக்கு திடீரென ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மற்றொரு நேர்மையான கேரளாவை சேர்ந்த ஐஏஎஸ்  அதிகாரியான கோபிகண்ணன், 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். நேற்று, தென்கனரா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த  சசிகாந்த் செந்தில் திடீரென ராஜினாமா செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பிறந்த இவர், திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலை.யில்  பி.இ. எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்தவர். கடந்த 2008ம்  ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு  எழுதி, ,தமிழக அளவில் 9வது ரேங்க்கில் வெற்றி பெற்றார். பயிற்சி முடித்தபின்  கர்நாடக மாநில பிரிவில் பணியில் சேர்ந்த அவர், பல்லாரி மாவட்ட கூடுதல்  கலெக்டராக பணியை தொடங்கினார். மாநிலத்தில் பல்வேறு துறையில் பணியாற்றிய அவர், 2017ம் ஆண்டு  தென்கனரா மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இந்த மாவட்டத்தில் கடந்த மாதம் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, 7 நாட்களாக இரவு - பகல் பாராமல் நிவாரணப் பணிகளில்  ஈடுபட்டு, மக்களின் பாராட்டை பெற்றார். தமிழ், ஆங்கில மொழிகளுடன் கன்னடம் மற்றும் துளு மொழிகளையும் நன்றாக  கற்றுக் கொண்டதின் மூலம் மொழி சிக்கல் இல்லாமல் மக்களிடம் எளிதாக பேசும் தன்மையை  பெற்றிருந்தார். மக்களிடம் நல்ல பெயரை பெற்றிருந்த இவர், நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தார். பதவி விலகல் குறித்து சசிகாந்த் செந்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  ‘கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக  மாநிலத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். கன்னட  மக்களுடன் எனக்கு ஏற்பட்ட பற்றையும், அவர்கள் என் மீது காட்டிய அன்பையும் மறக்க முடியாது. தொடர்ந்து,  மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை இழப்பது வருத்தம் தருகிறது. இருப்பினும், எனக்கென்று  கொள்கை, சிந்தாந்தங்களை வகுத்து செயல்படுகிறேன். எனது கொள்கைக்கு எதிராக  செயல்பட மனம் ஒப்புக் கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டதால், பதவியை ராஜினாமா முடிவை  எடுத்தேன்.

எனது பார்வையில் ஜனநாயகத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் நமது தேசம் பெரிய நெருக்கடியை சந்திக்கும் சூழ்நிலைக்கு  தள்ளப்படும் என்பது எனது கணிப்பாக உள்ளது. ராஜினாமா முடிவை எனது சுய  விருப்பத்தின் பேரில் எடுத்து இருக்கிறேனே தவிர, யாருடைய நெருக்கடிக்கும் பணிந்து  எடுக்கவில்லை. பணி காலத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். எப்போதும் கலகலப்பாக,  சிரித்த முகத்துடன் காணப்படும் சசிகாந்த் செந்தில், கடந்த ஒரு வாராக  இறுக்கமான முகத்துடன் இருந்ததாக அவரது நெருங்கிய வட்டாரம் மூலம்  தெரிய வருகிறது. அடிக்கடி பெங்களூரு வந்து சென்றுள்ளார். தனது ராஜினாமா  முடிவை மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை முதன்மை செயலாளர் காதர்  ஷாவிடம் முதலில் அவர் தெரிவித்துள்ளார். பிறகு, மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இவர் பதவி விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் போராட்டம்

சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்ததாக தகவல் பரவியதும், அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர்  அலுவலகம் முன் கூடி போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகள் கொடுத்த நெருக்கடியால் தான் அவர் ராஜினாமா செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டி கோஷமிட்டனர்.  ‘அவருடைய ராஜினாமாவை ஏற்கக் கூடாது, அவர் சுதந்திரமாக  செயல்பட அனுமதிக்க வேண்டும்,’ என்றும் வலியுறுத்தினர். சசிகாந்த்தின் ராஜினாமாவால், அவரது கார் டிரைவர் பாபு நாயக் அழுதப்படி கலெக்டர்  அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.

Tags : IAS officer ,Karnataka , Resignation of IAS officer, Tamil Nadu
× RELATED முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்