×

இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த பாக். உதவியுடன் காஷ்மீரில் ஊடுருவினோம் : தீவிரவாதிகள் வாக்குமூலம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகளை கடந்த 21ம் தேதி எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ராணுவப் பிரிவின் ஜெனரல் திலோன், கூடுதல் டிஜிபி முனிர் கான் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். அப்போது, கைது செய்யப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் அளித்த ஒப்புதல் வீடியோ வாக்குமூலத்தை ஒளிபரப்பினர். அதில், கைதான தீவிரவாதிகளில் ஒருவன், `நா்ன், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஜலேபி சவுக் பகுதியை சேர்ந்தவன். நானும் எனது நண்பன் நஜீமும் கச்சர்பான் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தீவிரவாத பயிற்சி எடுத்தோம். ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பாவில் இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நானும் அவனும் இணைந்து செயல்படுகிறோம். இருவரும் இணைந்தே எல்லையை கடக்க முடிவு செய்தோம்,’ என கூறினார். மற்றொரு தீவிரவாதி, நான் ராவல்பிண்டியை சேர்ந்தவன். லஷ்கர் இ தொய்பாவில் இருக்கிறேன். பாகிஸ்தான் அரசின் உதவியுடன் இந்திய ராணுவப் பிரிவுகளின் மீது தாக்குதல் நடத்த ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவினோம்,’ என தெரிவித்தான்.

இதைத் தொடர்ந்து,  அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு காஷ்மீரில் மட்டுமின்றி,  பூஞ்ச், ரஜோரி, ஜம்மு எல்லைப் பகுதிகள் முழுவதிலும் பல்வேறு தீவிரவாத அமைப்பினர் ஊடுருவ முயற்சிக்கின்றனர். அவை அனைத்தும் நமது படையினரால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அப்படி கடக்க முயன்ற 7 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலேயே பல நாட்களாக கிடக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சடலங்களை எடுத்து செல்லும்படி கூறிய பின்னரும், அவர்கள் எடுக்கவில்லை. கார்கில் போரின்போதும் அவர்கள் தங்கள் ராணுவத்தினரின் சடலங்களை எடுத்து செல்ல மறுத்தனர். இப்போது அந்நாட்டு குடிமகன்களின் சடலங்களை எடுத்து செல்ல மறுக்கின்றனர். தற்போது, நம்மிடம் உயிருடன் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்களே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : With the help,Pakistan army,attacked Indian Army
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...