×

திருவொற்றியூர் ஜோதி நகரில் திறந்தநிலை கால்வாயால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: தொற்றுநோய் பரவும் அபாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஜோதி நகரில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் செப்டிக் டேங்க் அமைத்து கழிவுநீரை தேக்கி, அது நிரம்பியதும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். குளிப்பது, துவைப்பது போன்ற அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தண்ணீரை தெருவோரம் மாநகராட்சி சார்பில் அமைத்துள்ள திறந்தநிலை கால்வாயில் விடுகின்றனர். இந்த கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக பராமரிப்பதில்லை. இதனால் சேறும் சகதியுமாக கால்வாய் தூர்ந்து, கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் நாட்கணக்கில் தேங்குகிறது.

இதனால, துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, இரவில் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்படுவதோடு, அப்பகுதியை சேர்ந்த பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “இப்பகுதியில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இங்கு உள்ள கால்வாய்கள் அனைத்தும் திறந்த நிலையில் உள்ளதால், தெருவில் இருக்கின்ற குப்பை கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. மேலும் சரியாக கொசு மருந்து அடிப்பது இல்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இதே பகுதியில் குணா என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டு வரி குடிநீர் வரிகளை தவறாமல் வசூலிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு தேவையான சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை.” என்றனர்.


Tags : Canal, mosquito production, increase
× RELATED குடியாத்தம் அடுத்த பனந்தோப்பு...