தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது: டீ, காபி விலை உயர்வால் தொழிலாளர்கள் கடும் அவதி

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அட்டைதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.168 அதிகரிக்கப்பட்டுள்ளது. டீ, காபி விலை உயர்வால் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழக அரசு கடந்த சனிக்கிழமை ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் இருநிலை சமன்படுத்திய ஆவின் பால் (மெஜந்தா) ஒரு  லிட்டர் ₹34லிருந்து ₹40, சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் ₹37லிருந்து ₹43, நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் ₹41லிருந்து ₹47, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ஒரு லிட்டர் ₹45லிருந்து ₹51 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, குடும்ப அட்டைதாரர்களுக்கு இருநிலை சமன்படுத்திய ஆவின் பால் (மெஜந்தா) அரை லிட்டர் ₹16.50லிருந்து ₹19.50,  சமன்படுத்திய பால் (நீலம்) அரை லிட்டர் ₹17லிருந்து ₹20, நிலைப்படுத்திய  பால் (பச்சை) அரை லிட்டர்  ₹19.50லிருந்து ₹22.50, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) அரை லிட்டர் ₹21.50லிருந்து ₹24.50 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அட்டைதாரர்களுக்கு 19ம் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 15ம் தேதிக்கான பால்கார்டு கடந்த 7ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இவர்களுக்கான கூடுதல் தொகை வருகிற 6ம் தேதி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,  குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக அரை லிட்டருக்கு ரூ.84 வழங்க வேண்டும். ஒரு லிட்டருக்கு ₹168 வழங்க வேண்டும்.பால் விலை உயர்வால் ஒவ்வொரு இல்லத்தரசிகளும் பட்ஜெட்டில் பாலுக்காக கூடுதலாக பணம் ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில்  பால் விலை உயர்வு அவர்களை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சில குடும்பத்தினர் டீ, காபியில் பால் சேர்ப்பதை தவிர்க்க தொடங்கியுள்ளனர்.ஆவின் பால் விலை உயர்வை காரணம் காட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறிய டீக்கடைகளில் டீ, காபி விலை நேற்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டது. டீ ரூ.10லிருந்து ₹12, ₹13 ஆக விற்கப்படுகிறது. ஸ்பெஷல் டீ, இஞ்சி டீ  போன்றவை ரூ.12லிருந்து ₹15, ரூ.16 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. காபி ₹12 லிருந்து ₹15, ₹16 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதேபோல பெரிய ஓட்டல்களில் டீ, காபி விலை ₹5 முதல் ₹6 வரை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. டீ,  காபி விலை உயர்வு தொழிலாளர்களையே கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கட்டுமான தொழிலாளர், சலவை தொழிலாளர், என கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் பல  நேரங்களில் உணவுக்கு பதிலாக டீ, காபிதான் உணவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு நாளைக்கு 4 முதல் 6 தடவை டீ, காபி குடிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் இந்த டீ, காபி விலை உயர்வால் அவர்களின்  சம்பளத்தில் கால்வாசி முதல் அரைவாசி டீ, காபி செலவுக்காக ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீ, காபி விலை உயர்வால் சிலர் டீ, காபி அருந்துவதை புறக்கணிக்கவும் தொடங்கியுள்ளனர்.

பால் அட்டைக்கு ₹168 அதிகரிப்பு
ஆவினில் பால் சில்லரை விற்பனையாளர்களுக்கு ஒரு விலையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு விலை என்றும் விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், குடும்ப  அட்டைதாரர்களுக்கு (1 மாதம்) 1 லிட்டருக்கு ₹168, அரை லிட்டர் ₹84 அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 6ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government , Tamil Nadu,milk , Tea
× RELATED தமிழகத்தில் ஏற்படும் பேரிடர்களால்...