×

சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை: வழிபாட்டுத்தலங்களுக்கு நேரக் கட்டுப்பாடு நீக்கம்.! புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் 2ம் அலையை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு இன்று முதல் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. கோயில்களுக்கு செல்ல நேரக்கட்டுப்பாட்டில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அலையின் ஒருநாள் பாதிப்பில் 1 லட்சத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  புதிதாக பரவும் கொரோனா பாதிப்பு மக்களிடையே மீண்டும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்திலும் 2ம் அலை ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கையில் உச்சம் தொட்டு வருகிறது. ஜெட் வேகமெடுத்துள்ளதால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நேற்று (10ம் தேதி) முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கும், கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபார கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். தேநீர் கடை மற்றும் உணவகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை. திரையரங்குகள், மால்கள் போன்றவற்றில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும், ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் என்பது உள்ளிட்ட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து மேலும் சில புதிய கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை இன்று (11ம்தேதி) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது இன்று முதல் தடை செய்யப்படுகிறது. அனைத்து வழிபாட்டுதலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டு தலங்களுடைய வழக்கமான நேரம் வரையோ அல்லது அதிகபட்சம் இரவு 10 மணி வரையோ பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும்,   அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் மெரினா, திருவான்மியூர் மற்றும் பெசன்ட்நகர், ேகாவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மீண்டும் பொதுமக்கள் செல்லாதவாறு விடுமுறை நாட்களில் தடுப்பு அமைத்து அடைக்கப்படுகிறது….

The post சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை: வழிபாட்டுத்தலங்களுக்கு நேரக் கட்டுப்பாடு நீக்கம்.! புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Marina beach ,Tamil Nadu government ,Chennai ,2nd wave of corona virus ,Tamil Nadu ,Chennai Marina ,Besantnagar ,Thiruvanmiyur ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...