×

வரும் 20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடைகிறது ‘சந்திரயான்-2’

அகமதாபாத்: சந்திரயான்-2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையை வரும் 20ம் தேதி சென்றடைகிறது எனவும், அடுத்த மாதம் 7ம் தேதி அது நிலவில் தரையிறங்குகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்திய  விண்வெளி திட்டத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் சிவன் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சென்றிருந்தார்.  அவரிடம் சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த மாதம் 22ம் தேதி ஏவிய பின், 5 முறை அதன் சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும்  பணியில் ஈடுபட்டோம்.

இன்னும் 2 நாளில் புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் வெளியேறவுள்ளது. நாளை காலை 3.30 மணியளவில் முக்கியமான பணியை மேற்கொள்ளவுள்ளோம். சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்  பாதைக்கு மாற்றவுள்ளோம். வரும் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டபாதையில் அது பயணிக்கும். இறுதியாக அடுத்த மாதம் 7ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் தரையிறக்கப்படும். தற்போது  விண்கலம் நல்ல நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை வரும் டிசம்பரில் மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : 'Chandrayaan -2'
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...