×

கர்நாடகாவில் கடும் வெள்ளம்: பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து கர்நாடகா செல்கிறார் மத்தியமைச்சர் அமித்ஷா

சென்னை: சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று கர்நாடகா மாநிலம் செல்கிறார். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலம்  வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கர்நாடகா மற்றும் குடகு உள்ளிட்ட 7  மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு கர்நாடகாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மொத்தம் 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடகு மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5. லட்சம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பெலகாவியில் 7 பேரும், உத்திர கர்நாடகாவில் 2 பேரும், சிமோகாவில்  ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16,875 பேர் 272 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,010 விலங்குகள் பாதுகாப்பு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு முன்னதாக  அறிவித்தது. தொடர்ந்து கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது.  

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து சென்னை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். பின்னர் இன்று கர்நாடகா மாநிலத்துக்கு  செல்கிறார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் சேதப்பகுதிகளை பார்வையிட உள்ளார்.


Tags : Amit Shah, Chief Minister of Karnataka, Karnataka
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்