×

அம்பத்தூர் சிடிஎச் சாலையில் சிதிலமடைந்த கட்டிடத்தில் தலைமை தபால் நிலையம் : ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்

அம்பத்தூர்: அம்பத்தூர் தலைமை தபால் நிலைய கட்டிடம் சிதிலமடைந்த கட்டிடத்தில் பொதுமக்கள்  அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அம்பத்தூர் சிடிஎச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
தரைதளம் மற்றும் மேல்தளம் கொண்ட இந்த தபால் நிலைய கட்டிடம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனை  முறையாக பராமரிக்காததால் தற்போது சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் தலைமை தபால் நிலையத்திற்கு தினமும் ஏராளமானோர் தங்களது பணிகளுக்காக வந்து செல்கின்றனர். 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மழை காலத்தில் கட்டத்தின் விரிசல் வழியாக தண்ணீர் ஒழுகுகிறது. இதனால், தபால் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து பாழகிறது. பல ஜன்னல் கண்ணாடிகள்  உடைந்து கிடப்பதால், மழை காலத்தில் காற்றடித்தால் சாரல் தண்ணீர் உள்ளே வருகின்றது. மேலும், இங்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால், தபால் நிலையத்துக்கு வெளியே சி.டி.எச் சாலையில் தான் வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், தபால் நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பணிகளுக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அடிக்கடி சர்வேர் பழுது ஏற்படுவதால், பொதுமக்களின் பணிகள் பாதிக்கப்படுகிறது. இங்குள்ள கணினி இயந்திரங்கள் சரிவர வேலை செய்வதில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடியும் நிலையில் உள்ள அம்பத்தூர் தலைமை தபால் நிலைய கட்டிடத்தை  இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தரவும், தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை செய்வதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

முகவரி தெரியாத ஊழியர்கள்


அம்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சாதாரண தபால்கள், மணியார்டர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு முறையாக வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்வது இல்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், நாங்கள் வரும்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது என கூறுகின்றனர். ஆனால், உண்மையாக அவர்களுக்கு  முகவரி சரியாக தெரியாததால், தபால், மணியார்டர்களை சேர்ப்பது இல்லை. இதனால், பொதுமக்கள் முக்கிய தபால்கள், பணம் கிடைக்காமல்  அவதிப்படுகின்றனர்.

Tags : Head Post Office ,dilapidated building , Ambathur CDH Road
× RELATED ஜன.29ம் தேதி முதல் பிப். 6 வரை நடத்த...