×

ஆந்திரா, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆந்திரா, கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் புல்வாமாவில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதலை நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளும், பாகிஸ்தான் உளவுத்துறையும் (ஐஎஸ்ஐ) திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்து, அவற்றை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பறப்பதற்கான பாகிஸ்தான் வான்வழியையும் மூடியது. இரு நாடுகள் இடையே சென்று வந்த சம்ஜோதா ரயில் சேவையையும் நிறுத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பாகிஸ்தானை மேலும் கோபம் அடையச் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆலோசித்தார்.

கடந்த பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமாவில் நடத்திய தாக்குதல் போன்று, இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது. இதனால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

காஷ்மீரில் தொடர்கிறது பதற்றம்
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி மக்கள் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். கார்கில் பகுதியில் நேற்று 300 பேர், ‘கூட்டு செயற்க்குழு’ என்ற பெயரில் கண்டன பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் குமர் அலி அகூன் கூறுகையில், ‘‘ஒருங்கிணைந்த மாநிலத்தையே நாங்கள் விரும்புகிறோம். ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் ஆகியவை ஒன்றாக இருக்க வேண்டும்.

இங்கு 370வது சட்டப்பிரிவை திரும்ப பெற நாங்கள் போராடுகிறோம்’’ என்றனர். போராட்டங்கள் தொடர்பாக கார்கில் துணை ஆணையர் மூலமாக, ஜனாதிபதிக்கு கூட்டு செயற் குழுவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஷ்மீரில் இன்டர்நெட் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் நடைபெறும் கலவரங்கள் வெளியே தெரியவில்லை என கூறப்படுகிறது. காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளி மாநிலத்தவர் பலரும், கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



Tags : Andhra Pradesh, Karnataka,7 states, Pakistani, militants
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...