×

கொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை

செங்கல்பட்டு: கொரோனா தொற்று 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு, திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடியபடி, கலெக்டர் ஜான்லூயிசிடம் மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதில் கோயில் திருவிழாகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், தெருக்கூத்து கலைஞர்கள் பல்வேறு வேடமிட்டு நடனமாடியபடி, கலெக்டர் ஜான்லூயிசிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், கல்பாக்கம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் கோரோனா 2வது அலை வீசுவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் கோயில் திருவிழா, பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாங்கள் ஏற்கனவே வேலை இல்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.  கடந்தாண்டு கொரோனா தொடங்கிய காலத்தில், தமிழக அரசு விதித்த ஊரடங்கால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். இந்தாண்டு சித்திரை முதல் ஐப்பசி மாதம் வரை மட்டுமே திருவிழாக் காலங்களில் தெருக்கூத்து நடைபெறும். அதுவும் இரவு நேரங்களில் மட்டுமே எங்களது நாடகம் நடைபெறும். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இந்த தடையால், நடப்பாண்டுக்கு முன் பணம் கொடுத்தவர்களும் கூத்து வேண்டாம் என தெரிவித்துவிட்டனர். மாவட்டத்தில் உள்ள 400 குடும்பங்கள் பசியின்றி வாழ, கொரோனா கால நிதி உதவியினை வழங்க, தமிழக அரசு முன்வந்து, தெருக்கூத்து கலைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ரகுராமன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் துரை உள்பட பலர் இருந்தனர்….

The post கொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Corona ,Chengalpattu ,2nd wave of corona ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!