சிவகிரி: வாசுதேவநல்லூர், அம்பை, நாங்குநேரி, கோயில்களில் ஆனித்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி தேர்த்திருவிழா மற்றும் தெப்ப உற்சவத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு மண்டகப் படிதாரர்களின் சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் அம்மையப்பர் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பகல் 1.45 மணிக்கு தேர்த்திருவிழா மண்டகபடிதாரர் தொழிலதிபர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினர் தேர் வடம் பிடிக்க, மனோகரன் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோயில் செயல்அலுவலர் சதீஷ், தக்கார் யக்ஞ நாராயணன், கோயில் ஆய்வாளர் கணேஷ் வைத்தியலிங்கம் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளை சுற்றி மாலை 3.30 மணியளவில் தேர் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் திருவிழா மண்டகப்படிதாரர்கள், சமுதாயத்தலைவர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அரசியல்கட்சியினர், அரசு அலுவலர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கலா, சுரேஷ்குமார், பாலசுந்தர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும், வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம், ஆனந்தன் தலைமையில் மணிவண்ணன், மாணிக்கம், சிவக்குமார், பெருமாள்சாமி, சந்தனப்பாண்டி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அம்பை: அம்பை திருமூலநாத சுவாமி கோயிலில் ஆனி திருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். பவுர்ணமி பெண்கள் குழுவினர் மற்றும் சிறுமியர் கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் 9ம் நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து 7.50 மணிக்கு கோயிலிலிருந்து கீழ ரதவீதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளினர். 8.50 மணிக்கு பக்தர்கள் ‘‘ஓம் நமசிவாய, ஓம் சிவாயநம’’ என கோஷங்கள் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர்ரதவீதிகள் வழியாக மீண்டும் 10.10 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது. விழாவில் தக்கார் வெங்கடேஸ்வரன், ஆய்வாளர் சீதாலட்சுமி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், கணக்கர் கந்தசாமி, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள் பேரவையினர், விழாக்கமிட்டியினர் பவுர்ணமி பெண்கள் குழுவினர், இளைஞரணியினர், நால்வர் அருட்பணி மன்றத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை தாமிரபரணியில் தீர்த்தவாரியும் இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிவுலாவும் நடக்கிறது. நாங்குநேரி: நாங்குநேரி சிவன் கோயிலில் ஆனி திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி திருநாகேஷ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜை நடந்தது. காலை, மாலையில் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக திருநாகேஷ்வரர், சிவகாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்குப் பின்னர் பக்தர்கள் அரஹரா சிவசிவ என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய ரத வீதிகளில் வலம் வந்த தேர் பிற்பகல் 1 மணிக்கு நிலையத்திற்கு வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.
