×

நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாக கூறி வேலைவாய்ப்பில் உரிமைகோர முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாக கூறி வேலைவாய்ப்பில் உரிமைகோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகமானது ரயில் ஓட்டுனர் மற்றும் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி பணிகளுக்காக 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் அடிப்படை கல்வித்தகுதி டிப்ளமோ என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடிப்படை தகுதிக்கு கூடுதலாக கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பம் விளக்கி வைக்கப்படும் என்றும், ஒருவேலை அவர்கள் அத்தகவலை மறைத்து பணியில் சேர்ந்து பின்னர் அத்தகவல் தெரியவந்தால் குறிப்பிட்ட நபர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி லட்சுமி பிரபா என்பவர் கூடுதல் கல்வித்தகுதி காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ரோ பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் லட்சுமி பிரபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தான் டிப்ளோமோ படித்துவிட்டு மேற்கொண்டு பி.இ படித்து வந்தேன். ஆனால் பி.இ தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதனிடையே மெட்ரோ வேலைக்கு தேர்வெழுதி வெற்றி பெற்றேன். ஆனால் கூடுதல் கல்வித்தகுதியை காரணம் காட்டி மெட்ரோ நிர்வாகம் எனக்கு பணி தர மறுத்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் தகுதியை பெற்றுள்ள தனக்கு பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் கல்வித்தகுதியை காரணம் காட்டி மெட்ரோ நிர்வாகம் செய்வது வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கும் செயல் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வாதாடிய மெட்ரோ நிர்வாகம் தரப்பு பி.இ தேர்வில் வெற்றி பெற்றது தெரிந்தும் அதை மறைத்து இந்த வேலைக்கு மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அறிவிப்பாணையிலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் பணிநீக்கம் செய்யப்படுவர் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என் கூறியது. மெட்ரோ தரப்பு வாததத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், சென்னை மெட்ரோ ரயில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்த பொறியியல் பட்டதாரி விண்ணப்பத்தை நிராகரித்தது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, வேலையில்லா திண்டாட்டம் இருப்பது உண்மை தான் என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர் என்பதற்காக, பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.



Tags : Metro, Engineering Graduate, Diploma, Educational Qualification, High Court
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...